புதுமாப்பிள்ளைக்கு..

புதுமாப்பிள்ளைக்கு..
~~~~~~

வெத்தலவள்ளிக்கிழங்கு என்று வழக்கத்தில் அழைக்கப்படும் வெற்றிலைவள்ளி கிழங்கு.

இதில் இருவகை உண்டு. கிழங்குமட்டும் இருப்பது. கிழங்கோடு காயும் காய்ப்பது. இதன் காய் உருளைகிழங்கு போல் இருக்கும்.

இதன் இலைகள் வெற்றிலைபோல் இருப்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம்.

அந்த காலத்தில் திருமணமாகி வீட்டுக்குவரும் புதுமாப்பிள்ளைகளிடம் கொழுந்தியார்கள் நிறைய விளையாடுவது வழக்கம். பெரும்பாலும் அந்தகாலத்தில் அனைவரும் வயது வித்தியாசமின்றி தாம்பூலம் தரிப்பதுண்டு.

புதுமாப்பிள்ளைகளுக்கு தரும் வெற்றிலை தாம்பூலத்தில் வெற்றிலை அளவில் உள்ள வெற்றிலைவள்ளி கிழங்கு இலைகளை தேர்ந்தெடுத்து ஒரு வெற்றிலை, ஒரு வெற்றிலை வள்ளி இலை என மாற்றி மாற்றி அடுக்கி வைத்துவிடுவார்களாம்.

அப்போதெல்லாம் ஒரு முறை வெற்றிலை பாக்கு போடும்போது நான்கைந்து இலைகளை பயன்படுத்துவார்கள். அப்படி வெற்றிலை போடும்போது சில வெற்றிலை வள்ளி இலையும் வாய்க்கு போய்விடும். வெற்றிலை வள்ளி இலை கசப்புசுவை கொண்டது. புதுமாப்பிள்ளையின் நிலைமை.?

வெற்றிலைவள்ளி கிழங்கை, இரண்டு இஞ்ச் நீளத்தில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, மண்பானையில் வைத்துவிட்டால்.
சில வாரங்களில் தானாக முளைவிட்டு வளரும் இதை விதைகளாக பயன்படுத்தலாம்.

காய்வள்ளி கிழங்கின் கிழங்கை இதே முறையிலும். காயையும் விதைகளாக பயன்படுத்தலாம்.

வெற்றிலை வள்ளி கிழங்குவகை பயிரிட பனங்கிழங்குக்கு தயார் செய்வதுபோல் இடுப்பளவு குழியெடுத்து, அதில் இயற்கை உரமிட்டு விதைப்பது வழக்கம். எவ்வளவு ஆழமாக குழியெடுக்கிறோமோ அவ்வளவு நீளமாக கிழங்கு வளரும்.

விதைக்கும்போது, விதைப்பவரின் முதுகில் குழந்தைகள் உப்புமூட்டை கட்டிக்கொள்வது வழக்கம். விதைப்பவரின் முதுகில் ஒருவர் உப்புமூட்டைகட்டியபடி விதைத்தால் இருகிழங்கு கிடைக்கும். இருவர் உப்புமூட்டை கட்டிக்கொண்டால் மூன்று கிழங்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அதேபோல் காய்வள்ளி (Air potato என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்) கிழங்கு விதைக்கும் போது குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு தாய்மார்கள் விதைப்பார்கள். காய் இடுப்பில் இருக்கும் குழந்தையைப்போல் கொழுகொழுவென உருண்டு திரண்டிருக்கும். என்ற நம்பிக்கை.

விதைத்த மூன்று மாதங்களில் காய்வள்ளி கிழங்கு காய்கள் அறுவடைக்குவரும்.

கிழங்குவள்ளியில் விதைத்த எட்டு மாதத்திற்கு பிறகு கொடி இறந்த பின் அறுவடை செய்யலாம். பெரும்பாலும் ஒரு விதையிலிருந்து இரண்டு அல்லது மூன்று கிழங்குகள் கிடைக்கும். ஒவ்வொறு கிழங்கும் பத்து முதல் இருபது கிலோ எடைக்கு குறையாமல் இருக்கும். கிழங்கு வழவழப்பு தன்மை கொண்டது.

சிறுவனாக இருந்தபோது ஒரு கிழங்கை என்னால் தூக்கமுடியாது.

எல்லா வகையிலும் கிழங்கு, காய் இரண்டையும் சமையலில் பயன் படுத்தினாலும், கிழங்கைவிட காய் நல்ல ருசியாக இருக்கும். கிழங்கை கொஞ்சம் அதிகமாக வேக வைத்து சமைக்க வேண்டும்.

காயை சிறு துண்டுகளாக்கி. சிறிது எண்ணெய்விட்டு வதக்கி, கொஞ்சமாய் சாம்பார்பொடி சேர்த்து, இன்னும் கொஞ்சம் கிளறி எடுத்து சாப்பிட்டால்.. யப்பாாாா… அதன் ருசிக்கு பதிவிடும் இந்த ஆன்ராய்டு போனையே பரிசாக கொடுக்கலாம்.

கடந்த ஆண்டு ஒரு கிழங்கு தம்பி பிரேமிடமிருந்து கிடைத்தது. அதை பயிரிட்டு அறுவடை செய்த கிழங்கை சமையல் செய்யாமல் சிறு துண்டுகளாக வெட்டி. விதையாக்கி பலருக்கு கொடுத்தேன்.

அடைப்புக்குறிக்குள் இணையத்தில் கிடைத்த தகவல் இணைத்துள்ளேன்.

(காவள்ளிக் கிழங்கு [Dioscorea oppositifolia] மருத்துவ குணமிக்கது. செரிமான குறைபாடு, களைப்பு, இருமல், ஆஸ்துமா மாதவிடாய் குறைபாடு, பித்தபை பிரச்சனை, முடக்குவாதம், எலும்பு புரைநோய் போன்றவற்றை குணமாக்கும் பல சேர்மங்கள் இதில் உள்ளதாக கண்டறிந்துள்ளனர். இதில் உள்ள அல்லன்டோயின் [allantoin] என்ற சேர்மம் செல்களைப் புதுப்பிக்க தூண்டிகிறது. )

படத்தில் கையில் கிழங்குடன் இருப்பது தம்பி மாரிமுத்து. மிகப்பெரிய படிப்புக்கும் மிகப்பெரிய வேலைக்கும் சொந்தக்காரரான இவர், இப்போது உத்திரமேரூர் அருகே மிகப்பெரிய இயற்கைவிவசாயி. அப்பகுதியில் இயற்கைவிவசாயத்தை மக்களின் மனதிலும் விதைத்துக்கொண்டிருக்கிறார்.

இயற்கை இனிது.
வானவன்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories