மிளகு சாகுபடி உத்திகள்!

மிளகு சாகுபடி உத்திகள்!

 

மிளகு சாகுபடி உத்திகள்!

லகளவில் மிளகு உற்பத்தியிலும் பரப்பிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் மலைப்பகுதிகளில் முக்கியத் தோட்டப்பயிரான மிளகு, இப்போது சமவெளியிலும் விளைகிறது. கேரளம், கர்நாடகம், மராட்டியம், அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா போன்ற மாநிலங்களில் முக்கியப் பயிராகும்.

தமிழகத்தில், மேற்குத் தொடர்ச்சிமலை, கீழ்ப்பழனிமலை மற்றும் சேர்வராயன் மலைப்பகுதியில் உள்ள காப்பித் தோட்டங்களில் கலப்புப் பயிராக அல்லது ஊடுபயிராக மிளகு பயிரிடப்படுகிறது. சேர்வராயன் மலைப்பகுதியில் முதல் அடுக்குப் பயிராகக் காப்பியும், இரண்டாம் அடுக்குப் பயிராகக் கமலா ஆரஞ்சு, கிராம்பு, ஜாதிக்காயும், மூன்றாம் அடுக்குப் பயிராக மலைச்சவுக்கு மரங்களில் மிளகும் பயிரிடப்படுகின்றன.

இரகங்கள்

பன்னியூர் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, பாலோடு, ஸ்ரீகரா, பஞ்சமி, பௌர்ணமி, ஐ.ஐ.எஸ்.ஆர்-தேவம், ஐ.ஐ.எஸ்.ஆர்-கரிமுண்டா, ஐ.ஐ.எஸ்.ஆர்- சக்தி போன்றவை தென்னிந்தியாவில் பயிரிடப்படும் முக்கிய இரகங்கள்.

மண் மற்றும் காலநிலை

மிளகுக்கொடிக்கு நல்ல வடிகால் வசதியுள்ள செம்பொறை மண் மிகவும் ஏற்றது. மேலும், மணல் கலந்த குறுமண்ணும் மிளகு வளர்ச்சிக்கு உகந்தது. இது, கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் உயரம் வரை நன்கு வளரும். இப்பயிருக்கு ஆண்டு மழையளவு 150-250 செ.மீ., வெப்பநிலை 10-40 டிகிரி செல்சியஸ், காற்றின் ஈரப்பதம் 60-97%, மண்ணின் கார அமிலத் தன்மை 4.5-6.0 இருத்தல் வேண்டும். ஜூன் – டிசம்பர் சாகுபடிக்கு ஏற்ற பருவமாகும்.

சார்பு மரம் நடவு

மிளகுக்கொடிகள் படரும் மரம், விரைந்து வளர்வதாகவும், சத்துகளுக்காக மிளகுடன் போட்டியிடாததாகவும் இருக்க வேண்டும். தமிழகத்தில் முள் முருங்கை, சீமைக்கொன்னை, சில்வர் ஓக், சூபாபுல் ஆகியன அதிகளவில் பயனில் உள்ளன. மிளகு நாற்றை நடும்போது சார்பு மரங்கள் 1.5-2 மீ. உயரம் இருக்க வேண்டும். கோடை மழை பெய்ததும் ஏப்ரல் மே-யில் 2×4 மீட்டர் இடைவெளியில் சார்பு மரங்களை நட வேண்டும்.

முள் முருங்கை, சீமைக்கொன்னை ஆகியவற்றின் வெட்டுக் குச்சிகளை நட வேண்டும். சில்வர் ஓக், சூபாபுல் போன்றவற்றை, மிளகுக்கொடியை நடுவதற்கு 3-4 ஆண்டுகளுக்கு முன்பே விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்ய வேண்டும். பலா, பாக்கு, தென்னை ஆகியவற்றையும் சார்பு மரமாகப் பயன்படுத்தலாம்.

உரமிடுதல்

கொடியிலிருந்து 50 செ.மீ. தொலைவில் உரத்தை இட வேண்டும். ஒரு கொடிக்கு மட்கிய தொழுவுரம் 10 கிலோ, 100 கிராம் தழைச்சத்து, 40 கிராம் மணிச்சத்து, 140 கிராம் சாம்பல் சத்தைத் தரக்கூடிய உரங்களை, இரு பாகங்களாகப் பிரித்து மே-ஜூன் மற்றும் செப்டம்பர்-அக்டோபரில் இட வேண்டும். இரசாயன உரத்தை இட்ட ஒரு மாதம் கழித்து, ஒரு கொடிக்கு 100 கிராம் அசோஸ்பைரில்லம், 25 கிராம் மெக்னீசியம் சல்பேட்டை இட வேண்டும். இரசாயன உரத்துக்கு மாற்றாக, ஒரு கொடிக்கு 200 கிராம் வேம்பு, 50 கிராம் அசோஸ்பைரில்லம், 50 கிராம் பாஸ்போபாக்டீரியா, 10 கிலோ தொழுவுரம் ஆகியவற்றை இடலாம்.

பாசனம்

பொதுவாக மிளகு மானாவாரியாகத் தான் பயிரிடப்படுகிறது. இருப்பினும், கொடிகளை நட்ட முதல் மூன்று ஆண்டுகள் கோடையில் பாசனம் செய்ய வேண்டும். டிசம்பர்-மே மாதங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை குழிக்கு எட்டு லிட்டர் நீரை விட்டால் நல்ல மகசூலைப் பெறலாம். சொட்டுநீர்ப் பாசனம் மூலம் திரவ உரம் மற்றும் கரையும் உரங்களை, கொடியின் வேர்ப்பகுதியில் செலுத்தலாம்.

களைக்கட்டுப்பாடு

ஆண்டுக்கு இருமுறை, ஜூன் ஜூலை மற்றும் அக்டோபர் நவம்பரில் களைகளை அகற்ற வேண்டும். மூடாக்கை இட்டால், கொடியின் வேரைச் சுற்றிக் களைகள் வளர்வதைத் தடுக்கலாம்.

கவாத்து

மிளகுக் கொடியின் நுனியைக் கிள்ளிவிட்டால் பக்கக் கிளைகள் உருவாகும். முதல் இரண்டு ஆண்டுகள், பூக்கும் அனைத்துப் பூங்கொத்துகளையும் நீக்கினால், தண்டு வலிமையுடன் நன்கு வளரும். மிளகுக்கொடி படர் மரங்களின் உயரத்தைத் தொடுமளவில் வந்ததும், மேல் பரப்பில் உள்ள கொடியை வெட்டி நாற்று உற்பத்திக்குப் பயன்படுத்தலாம். சார்பு மரங்களை ஜூன் மற்றும் செப்டம்பரில் கவாத்து செய்ய வேண்டும்.

முதல் மூன்று ஆண்டுகள் வரையில், சார்பு மரங்களைக் கவாத்து செய்து நேராகவும், சில கிளைகள் மட்டும் உடையனவாகவும், சத்துகளுக்கு போட்டியிடாதவாரும் வளர்க்க வேண்டும்.  நான்காம் ஆண்டிலிருந்து சார்பு மரங்களைக் கவாத்து செய்யும் போது மிளகுக்கொடிக்குப் போதிய நிழல் கிடைக்கச் செய்ய வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு: பூச்சி நிர்வாகம்

மிளகுப் பயிரை பல்வேறு பருவங்களில் ஏறக்குறைய 21 வகைப் பூச்சிகள் தாக்குகின்றன. அவற்றுள் முக்கியமானவை பொல்லு வண்டு, இலைப்பேன், மாவுப்பூச்சி, செதில் பூச்சி.

பொல்லு வண்டு: மிளகைத் தாக்கிப் பெருஞ் சேதத்தை விளைவிக்கும்; பயிர் வளர்ச்சியை 30-40% பாதிக்கச் செய்யும். இப்பூச்சி இலையைக் குடைந்து சேதத்தை ஏற்படுத்தும். மேலும் இளம் காய்களின் உட்பகுதியைக் குடைவதால், முதலில் மஞ்சளாக மாறும் காய்கள், பிறகு, கறுப்பாக மாறிச் சுருங்கி விடும். செப்டம்பர் அக்டோபரில் அதிகமாகவும், கோடையில் குறைவாகவும் காணப்படும்.

இவ்வண்டைக் கட்டுப்படுத்த, காய்கள் பிடித்த 30 நாட்கள் கழித்து, அதாவது, ஜூன் ஜூலையில், ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி குயினால்பாஸ் வீதம் கலந்து இலைகளில் தெளிக்க வேண்டும். தொடர்ந்து, காய்கள் திரளும் போது, அதாவது செப்டம்பர் அக்டோபரில் 0.6% வேப்பெண்ணெய்க் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

இலைப்பேன்

இதன் தாக்குதல், உயரமான மலைப் பகுதிகளில் இளங்கொடிகளிலும், சமவெளியில் நாற்றங்காளிலும் தீவிரமாக இருக்கும். இளம்பருவ மற்றும் முதிர்ந்த இலைப்பேன்கள் இலைகளுக்கு உள்ளே இருப்பதால் இலைகள் வீங்கியிருக்கும். சேதம் தீவிரமானால், இளங் கொடிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் குறையும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி டைமித்தோயேட் அல்லது 2 மில்லி குயினால்பாஸ் வீதம் கலந்து, துளிர் விடும்போது தெளிக்க வேண்டும். பிறகு, தாக்கத்தைப் பொறுத்து, ஒருமாத இடைவெளியில் 2-3 தெளிக்க வேண்டும்.

 

மாவுப்பூச்சி

இதன் தாக்குதல் வறட்சிக் காலத்தில் அதிகமாகவும், மழைக்காலத்தில் குறைவாகவும் இருக்கும். தாக்கப்பட்ட கொடிகள் முழுவதும் மெல்லிய வெள்ளை நிறத்தில் நூலிழையைப் போல இருக்கும். இது தேன் போன்ற திரவத்தைச் சுரப்பதால் எறும்புகளின் நடமாட்டம் இருக்கும். மேலும், கேப்னோடியம் என்னும் கரும்பூசணம் வளர்வதால் இலைகள் கறுப்பாக இருக்கும். ஆகவே, மாவுப்பூச்சி தாக்கிய கொடிகளை நறுக்கி அகற்ற வேண்டும். எறும்புகள் இருக்கும் போது 0.075% குளோர்பைரிபாஸ் மருந்தை நிலத்திலிட்டு மண்ணை அணைக்க வேண்டும்.

செதில் பூச்சி

முசல் செதில் பூச்சியும், தென்னைச் செதில் பூச்சியும் மிளகைத் தாக்கும். இவற்றின் தாக்குதல் தீவிரமானால் இலைகள் காய்ந்திருக்கும். இவற்றின் தாக்குதல், பின்பருவ மழைக்காலம் மற்றும் வெய்யில் காலத்தில் அதிகமாக இருக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த, 0.075% குளோர்பைரிபாஸ் மருந்துக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

நோய் நிர்வாகம்

இலையழுகல் & கருகல் நோய்: இவற்றை உருவாக்கும் ரைசக்டோனியா சோலானையானது, இலை, தண்டு மற்றும் வேர்ப் பகுதியைத் தாக்கும்.  மண்ணிலுள்ள நோய்க்காரணிகள், நீரைத் தெளிக்கும் போது மேல்நோக்கி படர்ந்து, இலை மற்றும் தண்டில் சேதத்தை ஏற்படுத்தும்.

 

அடி வாடல் நோய்: இந்நோய், இலை மற்றும் தண்டுப் பகுதியைத் தாக்கும். தண்டில் நோய்க் காரணியின் பூசணம் வளர்ந்திருக்கும். பிறகு தண்டுப்பகுதி அழுகுவதால், இளம் நாற்றுச் செடி இறந்து போகும்.

இலைப்புள்ளி மற்றும் இலையழுகல்: இதற்குக் காரணம், பைட்டோதோரா காபிஸ்சி என்னும் பூசணமாகும். இது, நாற்றுகளில் இலைப்புள்ளி மற்றும் இலையழுகல் அறிகுறியை ஏற்படுத்தும். சில சமயம் படரும் கொடிகளின் நுனிப்பகுதி அதிகமாகப் பாதிக்கப்படும்.

இந்த மூன்று நோய்களும் நாற்றுகளைப் பரவலாகத் தாக்குவதால், இவற்றைக் கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் நாற்றங்காலில் ஓடும் தண்டுகளின் நுனிப்பகுதி தரையில் படாத வகையில் மேல்நோக்கிக் கட்டி விட வேண்டும். நாற்றுக்காக வெட்டிய தண்டுகளை 0.2% கார்பன்டாசிம் பூசணக்கொல்லிக் கரைசலில் 30 நிமிடம் நனைத்து நட வேண்டும்.

இந்த நோய்கள் இருந்தால், ஒரு சத போர்டோக் கலவை அல்லது 0.2% காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது 0.2% கார்பன்டாசிம் மருந்தை 20 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். நோய் தீவிரமானால், நாற்றுப் பைகளிலும் இந்த மருந்துக் கரைசலை ஊற்ற வேண்டும்.

பைட்டோதோரா அடி அழுகல்

இந்நோய், பைட்டோதோரா காப்ஸ்சி என்னும் பூசணத்தால் ஏற்படும். இது மிகவும் வேகமாகப் பரவும். இதன் தாக்கம் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் அதிகமாக இருக்கும். மிளகுக் கொடியின் அனைத்துப் பகுதிகளையும் தாக்கிச் சேதத்தை விளைவிக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

பைட்டோதோரா அடி அழுகல் நோய் மிக மோசமானது என்பதால், ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த வேண்டும். நடவுக்கு முன் குழிக்கு 0.2% காப்பர் ஆக்ஸி குளோரைடு மருந்தை ஊற்ற வேண்டும். நீர் தேங்கும் பகுதியில் மிளகைப் பயிரிடக் கூடாது. நோயினால் பாதிக்கப்பட்ட கொடிகளைக் கவனத்துடன் வெட்டி அகற்ற வேண்டும். ஓடும் தண்டுகளைத் தரைக்கு மேல் 1 மீட்டர் உயரத்தில் கவாத்து செய்ய வேண்டும்.

அறுவடை

மிளகு பூத்ததிலிருந்து காய்கள் பிடிக்க 6-8 மாதங்கள் ஆகும். பொதுவாக, மார்ச் முதல் மே வரை அறுவடைக் காலமாகும். சரத்திலுள்ள ஒன்றிரண்டு மணிகள் பச்சை நிறத்திலிருந்து இளஞ்சிவப்பாக மாறும்போது அறுவடை செய்ய வேண்டும். பிறகு சரத்திலிருந்து மணிகளை உருவியெடுத்து, வெய்யிலில் 7-10 நாட்கள் காய வைக்க வேண்டும். கைகள் அல்லது மணிகளைப் பிரிக்க உதவும் கருவி மூலம் மணிகளைப் பிரிக்கலாம்.

இந்தக் கருவி மூலம் ஒருமணி நேரத்தில் 1.5 டன் மிளகைப் பிரித்தெடுக்க முடியும். மேலும், இதன் மூலம் சுத்தமான மிளகைப் பெறலாம். ஒரு நிமிடம் வெந்நீரில் நனைத்துக் காய வைத்தால், மிளகை உலர்த்தும் நேரம் குறையும். ஒரு கொடியிலிருந்து ஆண்டுக்கு 2-3 கிலோ உலர் மிளகு மகசூலாகக் கிடைக்கும்.

முனைவர் மா.ஆனந்த், முனைவர் பி.ஆர்.கமல் குமரன், முனைவர் எஸ்.பிரனீதா, முனைவர் அ.சங்கரி, முனைவர் எஸ்.நந்தக்குமார், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் 636 602, ஏற்காடு, சேலம் மாவட்டம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories