மழைக்காலமும் கால்நடைப் பராமரிப்பும்! பொது மேலாண்மை

மழைக்காலமும் கால்நடைப் பராமரிப்பும்!

பொது மேலாண்மை

சூழ்நிலைக்கு ஏற்ப, கவனத்துடன் கால்நடைகளைப் பராமரிக்க வேண்டும். மழைக்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், பொருளாதார இழப்பைத் தவிர்க்கலாம்.

தொற்று நோய்கள்: நச்சுயிரி, நுண்ணுயிரி, ஒட்டுண்ணியால் பாதிப்பு ஏற்படும். தீவனத்தில் உண்டாகும் பூசணத் தொற்றால், செரிமானச் சிக்கல், கழிச்சல் ஏற்படும். குடற்புழுக்களால் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு இரத்தச் சோகையும் வரும். கழிவுநீரில் கொசுக்கள் பெருகுவதால், நுண்ணுயிரிகள் மற்றும் ஒட்டுண்ணிகளால் நோய்த்தொற்று ஏற்படும்.

வெளிப்புற ஒட்டுண்ணிகள் கால்நடைகளைக் கடுமையாகப் பாதிக்கும். சினை மாடுகள், கன்றுகள், குட்டிகள் கூடுதலாகப் பாதிக்கும். இடி, மின்னல், மின்சாரத்தால் எதிர்பாரா விபத்துகள் நிகழலாம். மழைக்கால நோய்த்தொற்று மற்றும் தீவனக் குறையால் உற்பத்தியும் பாதிக்கும்.

பராமரிப்பும் நோய்த் தடுப்பும்

கொட்டகைப் பராமரிப்பு: கால்நடைகளை மழையில் நனைய விடக்கூடாது. தொழுவத்துக்குள் மழைநீர் வரக்கூடாது. பண்ணையைச் சுற்றி மழைநீர் தேங்கக் கூடாது. கொசுக்களைப் பெருகவிடக் கூடாது. கால்நடைக் கழிவுகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். தரை ஈரமில்லாமல் இருக்க வேண்டும். பண்ணையைச் சுற்றிச் சுண்ணாம்புத் தூளைத் தூவ வேண்டும். தொழுவம் காற்றோட்டமாக இருக்க வேண்டும்.

தொற்று நோய்த் தடுப்பு

கறவை மாடுகளுக்குச் சப்பை நோய், தொண்டை அடைப்பான் போன்ற தொற்று நோய்கள் வராமல் தடுக்க, மழைக்காலத்துக்கு முன்பே தடுப்பூசிகளைப் போட வேண்டும். ஆடுகளுக்குத் துள்ளுமாரி நோய்த் தடுப்பூசியை மழைக்கு முன்பே போட்டுவிட வேண்டும். நாட்டுக்கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசியைப் போட வேண்டும். கால்நடைகளுக்குக் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

ஒட்டுண்ணிகளினால் பரவும் நோய்களைத் தடுக்க, கால்நடைகளுக்கு வெளிப்புற ஒட்டுண்ணி நீக்கம் செய்ய வேண்டும். இறந்த கால்நடைகள், கோழிகளை, சுண்ணாம்புக் கலவை கொட்டப்பட்ட குழிகளில் தான் புதைக்க வேண்டும். குளம், குட்டை மற்றும் திறந்த வெளியில் போட்டால் நோய்கள் பரவும். நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகக் கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

தீவன மேலாண்மை

பூசணத்தொற்று இல்லாத தீவனத்தைக் கொடுக்க வேண்டும். கலப்புத் தீவனம், தீவன மூலப் பொருள்களை, ஈரமில்லாத, காற்றோட்டமான இடத்தில் சேமிக்க வேண்டும். வைக்கோல், சோளத்தட்டை, காய்ந்த கடலைக்கொடி போன்றவற்றை மழையில் நனையாமல் சேமிக்க வேண்டும். மழையில் நனைந்த உலர் தீவனங்களைக் கால்நடைகளுக்குக் கொடுக்கவே கூடாது.

சுத்தமான குடிநீரைக் கொடுக்க வேண்டும். தொழிற்சாலைக் கழிவுநீர், சாக்கடை  கலந்த நீரில் நைட்ரேட் போன்ற நச்சுகள் கலந்திருக்கும். இந்நீரை அருந்தும் கால்நடைகள் இறக்க நேரிடலாம். கழிவு நீரில் விளையும் பசுந்தீவனத்தாலும் நச்சுத்தன்மை ஏற்படலாம். எனவே, இத்தகைய தீவனத்தைக் கால்நடைகளுக்குக் கொடுக்கக் கூடாது. நீர்த் தொட்டியில் பாசி இருக்கக் கூடாது. இதைத் தவிர்க்க, அவ்வப்போது சுண்ணாம்பை அடிக்கலாம். உற்பத்தித் திறன் குறைவதைத் தவிர்க்க, தாதுப்புக் கலவையைக் கொடுக்க வேண்டும்.

பொது மேலாண்மை

இடி, மின்னல் பயத்தினால் மாடுகள் மோதிக்கொண்டால் காயங்கள் ஏற்படும். சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படலாம். எனவே எச்சரிக்கை தேவை. மழையின் போது, திறந்த வெளியில், ஒற்றை மரத்தில், மின் கம்பத்தில் மாடுகளைக் கட்டக்கூடாது. ஏனெனில், இடி, மின்னல், மின்சாரத்தால் விபத்துகள் ஏற்படலாம். மின்கசிவு ஏற்படாமல் தொழுவத்தைப் பராமரிக்க வேண்டும்.

மருத்துவர் வ.குமரவேல், முனைவர் சு.செந்தூர் குமரன், வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories