சோற்று கற்றாழை சாகுபடி முறைகள்

சோற்றுக் கற்றாழை
3 வகை கற்றாழை
நடவு
அறுவடை

சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழை ஒரு தரிசு நிலப்பயிராகும். மழை குறைவான பகுதியில் விவசாயம் சரியான அளவில் நடைபெற முடியாத நிலையில் மூலிகைப் பயிரான சோற்றுக் கற்றாழை பெருமளவில் பயிரிடப்படுகிறது.

சோற்றுக் கற்றாழை அதிகளவில் தரிசுநிலப் பகுதிகளிலேயே பயிரிடப்படுகிறது. ஆஸ்துமா, குடல் புண், உடல் உஷ்ணம் போன்ற நோய்களுக்கு கற்றாழை ஒரு நல்ல மருந்தாகும். இதன் தோல்பகுதியை சீவி எடுத்து, மோர், பாலில் கலந்து குடித்து வந்தால் நோய்கள் குணமாகும். இது ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் ஒரு மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது.

இதுதவிர மூலிகை சோப்பு, ஷாம்பு, மருந்து, மாத்திரைகள் தயாரிக்க மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. இதனால் வெளிமாநிலங்களுக்கு பெருமளவில் இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சோற்றுக் கற்றாழையை வாழை சாகுபடியில் பக்க வாழையை எடுத்து நடுவது போன்றே பயிரிட வேண்டும். மூன்று அடிக்கு ஒன்று என்ற விகிதத்தில் சோற்றுக் கற்றாழையை நடலாம். பத்து நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.

இடைவெளி பயிர் செய்திருப்பதால் நீரை எடுத்துச் சென்று சோற்றுக் கற்றாழைக்கு விடலாம். சொட்டுநீர் பாசனம் இந்த பயிருக்கு உகந்தாகும்.

சோற்றுக் கற்றாழை செழித்து வளர்ந்தால் கீற்றுகள் ஒவ்வொன்றும் 300 கிராம் முதல் 1 கிலோ எடை வரை பருமனாக இருக்கும். 1 கிலோ எடையுள்ள கீற்று ரூ.4 முதல் 5 வரை விற்பனையாகிறது.

களைகள் அதிகம் தேங்கவிடாமல் பார்த்துக் கொண்டால் உரம் போடத் தேவையில்லை. ஓரளவு சாண உரம் இட்டால் போதும். ஒரு முறை சோற்றுக் கற்றாழை நட்டால் ஓராண்டுக்கு பலன் கொடுக்கும். 15 முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை அதன் கீற்றுகளை மட்டும் அறுவடை செய்யலாம்.

இது வெய்யில் காலத்துக்கு ஏற்ற பயிராகும். மருத்துவக் குணம் மிக்க சோற்றுக் கற்றாழைக்கு பூச்சி மருந்து அடிக்கத் தேவையில்லை. தண்ணீர் வசதியில்லாத கரடுமுரடான இடங்கள், பாறைகள் சூழ்ந்துள்ள இடங்கள் சுண்ணாம்பு பாறைகள் சூழ்ந்துள்ள பகுதிகளில் கூட சோற்றுக் கற்றாழை நன்றாக வளரும். இந்த சோற்றுக் கற்றாழை விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக பலன் கொடுக்கும் பயிராக உள்ளது.

இந்தியாவில் ராஜஸ்தான், ஆந்திரம், குஜராத், தமிழ்நாட்டில் சேலம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இது பெருமளவில் பயிரிடப்படுகிறது.

 

 

 

3 வகை கற்றாழை

 • குர்குவா கற்றாழை, கேப் கற்றாழை, சாகோட்ரின் கற்றாழை என கற்றாழையில் மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் பயிரிடப்பட்டு வருவது குர்குவா கற்றாழை.
 • வறட்சிப் பிரதேசங்கள் மற்றும் கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரம் அடி உயர மலைபிரதேசங்களிலும் இது பயிரிடப்படுகிறது. இதன் இலைகள் தடிமனாகவும், சிறிது சிவப்பு கலந்து பச்சை நிறத்தில், 30 முதல் 60 செ.மீ. நீளமாக சிறிய முட்களுடன் இருக்கும்.
 • தரிசுமண், மணற்பாங்கான நிலம், பொறைமண் போன்றவை இதற்கு ஏற்றது. எனினும் எல்லா வகையான மண்ணிலும் கற்றாழையை சாகுபடி செய்யலாம். நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணற்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது.

நடவு

 • தாய்ச்செடியில் இருந்து ஒன்று அல்லது இரண்டு வயதுடைய பக்கக்கன்றுகளை பிரித்து நடவுக்கு பயன்படுத்த வேண்டும். ஒரே அளவுள்ள கன்றுகளை தேர்ந்தெடுத்தல் முக்கியம். இதனால் செடிகள் சீராக வளர்வதுடன் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும்.
 • கற்றாழையை தனிப்பயிராக பயிரிடும்போது ஹெக்டேருக்கு 10 ஆயிரம் கன்றுகள் தேவைப்படும்.    இப்பயிரை வருடத்துக்கு இரண்டு பருவங்களில் பயிரிடலாம். ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடவு செய்யலாம். இலைகள் முற்றும் தருவாயில் ஓரளவு வறட்சியான தட்பவெப்பம் இருக்க வேண்டும். இதனால் இலையில் தரமான கூழ் கிடைக்கும்.
 • நிலத்தை இரணடு முறை உழுது, ஹெக்டேருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்க வேண்டும். செடிகள் வாளிப்பாக வளர்வதற்கு செடிகளுக்கிடையே 3 அடி இடைவெளி விட்டு நடவேண்டும்.
 • இப்பயிருக்கு ரசாயன உரங்கள் தேவைக்கேற்ப இட வேண்டும். வளமான நிலங்களுக்கு தொழு உரம் இட்டால் போதுமானது. தரிசு மற்றும் வளமில்லாத மண்ணுக்கு செடிகளை நட்ட 20-வது நாளில் ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்து இடுவது அவசியம். ஹெக்டேருக்கு 120 கிலோ ஜிப்சத்தை அடியுரமாக இடுவது அவசியம். இதனால் கூழ் அதிக அளவில் கிடைக்கும்.
 • கற்றாழையில் அதிக பூச்சித் தாக்குதல், நோய்கள் தோன்றுவதில்லை.
 • நீர்த் தேங்கும் நிலத்தில் அழுகல் நோய் ஏற்படும். இதற்கு நிலத்தில் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

அறுவடை

 • நட்ட ஆறு முதல் ஏழு மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்து, இலைகளை ஆறு மணி நேரத்திற்குள் பக்குவபடுத்துவதற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
 • ஹெக்டேருக்கு 15 டன் கற்றாழை இலை கிடைக்கும். இலைகளில் 80 முதல் 90 சதவீதம் நீர் உள்ளதால் விரைவாக கெட்டுவிடும். இதனால் அறுவடை செய்த உடனே இலைகளை பக்குவப்படுத்தி அவற்றில் இருந்து கூழை பிரித்தெடுக்க வேண்டும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories