மரிக்கொழுந்து சாகுபடி

தவனம் என்றழைக்கப்படும் மரிக்கொழுந்து ஒரு நறுமணத் தாவரமாகும். இச்செடிகள் இவற்றின் மணமுள்ள இலைகளுக்காகவும், அதிலிருந்து தயாரிக்கக் கூடிய நறுமண எண்ணெய்க்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது.  மாலைகளிலும், மலர் செண்டுகளிலும் இதன் இலைகள் அவற்றின் நறுமணத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.   இதன் நறுமண எண்ணெய் அழகு சாதனப் பொருட்களுக்கு நறுமணமூட்டவும், வாசனைத் திரவியங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.  அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கேக், புகையிலை மற்றும் பானங்களுக்கு நறுமணமூட்ட அதிக அளவில் உபயோகிக்கப்படுகிறது.

மரிக்கொழுந்து ஓராண்டு வாழும் வகையை சார்ந்த பயிராகும்.  45-80 செ.மீ. உயரம் நேராக வளரக்கூடிய இச்செடிகள் சாம்பல் நிறம் கலந்த பச்சை வண்ண இலைகளை கொண்டது. பூங்கொத்தானது காப்பிட்டுலம் வகையைச் சார்ந்ததாகும்.  இருபாலினப் பூக்கள் நடுப்பாகத்திலும் பெண் பூக்கள் ஓரத்திலும் அமைந்திருக்கும்.

தவனத்தில் நெட்டை மற்றும் குட்டை என இரு வகைகள் உள்ளன.  அவற்றில் நெட்டை வகை சற்று உயரமாக (80 செ.மீ வரை) வளரும் தன்மையும், பிளவுபட்ட இலைகளையும், காலம் தாழ்ந்து பூக்கும் தன்மையும் கொண்டதாகும்.  குட்டை வகையில் அனைத்து இலைகளும் செடிகளின் அடிப்பாகத்திலும், மேல்பாகத்திலும் பிளவுபட்டு காணப்படும். சீக்கிரமாக பூக்கும் தன்மை கொண்டது.

இப்பயிர் வளம் செறிந்த செம்மண்  நிலங்களிலும், நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் நிலங்களிலும் நன்கு வளரும் மிதமான மழை, நல்ல சூரிய ஒளி, காலை பனி ஆகியவை நல்ல விளைச்சல் கிடைக்க உதவுகின்றன. பூக்கும் பருவத்தில் அதிக அளவு மழை மற்றும் வெப்பம் இருந்தால் கிடைக்கும் எண்ணெயின் அளவு குறைகின்றது.

மாலைகளுக்கு உபயோகிப்பதற்காக பயிரிடப்படும் மரிக்கொழுந்து விதைத்ததில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் அறுவடை செய்யபடுவதால் எந்த பருவத்திலம் சாகுபடி செய்யலாம். ஆனால், வாசனை எண்ணெய்க்காக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி – மார்ச் வரை சாகுபடி செய்வது நல்லது. பின்பு மறுதாம்பு பயிரை ஏப்ரல் – மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.

சாகுபடி நுட்பம்

விதைகளை 10 கிலோ மணலுடன் கலந்து, சுமார் 3 கிராம் விதை 1 சதுர மீட்டர் பரப்பளவில் விழுமாறு தூவி விதைக்க வேண்டும். பின்பு விதைகளை மணல் தூவி மூடவேண்டும். பூவாளி கொண்டு ஒரு நாளைக்கு இருமுறை வீதம் தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைத்த 3-4 நாட்களில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். விதைகளை 48 மணி நேரம் ஈரத்துணியில் ஊறவைத்து, முளைக்கட்டியும் விதைக்கலாம்.

நடவு  வயலை கட்டிகளின்றி நன்கு உழுது 2 ஒ 2 மீட்டர் அளவில் பாத்திகள் அமைத்துக் கொள்ளவேண்டும்.  விதைத்த 30 நாட்கள் கழித்து நாற்றுக்களை பிடுங்கி 15 ஒ 7.5  செ.மீ. என்ற அளவில் இடைவெளியிட்டு நடவேண்டும். அந்த சமயம் நாற்றுக்கள் சுமார் 10 – 12 செ.மீ. அளவு உயரமிருக்கும்.

மரிக்கொழுந்து பயிருக்கு எக்டருக்கு 15 டன் நன்கு மக்கிய தொழு உரம், 125 கிலோ தழை, 125 கிலோ மணி மற்றும் 75 கிலோ சாம்பல் சத்து உரங்கள் சிபாரிசு செய்யப்படுகிறது. முழு அளவு நன்கு மக்கிய தொழு உரம், மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாகவும், 50 கிலோ தழைச்சத்தினை நடவு செய்த 25வது நாளில் முதல் மேலுரமாகவும், பின்னர் 25 கிலோ தழைச்சத்தினை ஒவ்வொரு முறையும் அறுவடை செய்த பின்னர் மேலுரமாக இடவேண்டும்.

பொதுவாக இச்செடிகளை பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை. சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் வேப்பெண்ணெயை நீரில் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம்.நாற்றங்காலில் நாற்றுக்கள் பூஞ்சாணத்தால் பாதிக்கப்பட்டு அழுகிவிடும். நாற்றுக்கள் மழை காலத்தில் உற்பத்தி செய்யாதிருந்தால் அழுகல் நோயை தவிர்க்கலாம்.

விதைத்த 5 – 6 மாதங்கள் வரை இப்பயிரை அறுவடை செய்யலாம்.  விதைத்த 45 வது நாளில் முதல் அறுவடையும், அதன் பின் 30 – 40 நாட்கள் இடைவெளியில் தொடர்ச்சியாக அறுவடையும் செய்யலாம்.நல்ல விளைச்சல் பெறவும், அதிக அளவு எண்ணெய் கிடைக்கவும் அதிக அளவு பூ மொட்டுகள் விரிந்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். பொதுவாக பிப்ரவரி கடைசி மற்றும் மார்ச் மாதங்களில் அறுவடை செய்ய வேண்டும்.  செடிகளை தரையிலிருந்து சுமார் 10 செ.மீ.உயரம் விட்டு தழை வெட்ட வேண்டும்.  ஒரு எக்டரிலிருந்து 17 பசுந்தழையும், அவற்றிலிருந்து 12.50 கிலோ வாசனை எண்ணெயும் கிடைக்கிறது.

வாசனை எண்ணெய் எடுத்தல்

வாசனை எண்ணெய் எடுக்க மரிக்கொழுந்து செடிகளை அதிக அளவு பூ மொட்டுகள் வெளிவந்த பின்பு பிப்ரவரி மாத கடைசியில் அல்லது மார்ச் மாதம் அறுவடை செய்து 2-3 நாட்கள் காய வைக்க வேண்டும்.

காய்ச்சி வடிக்கும் முறையில் எண்ணெய் பிரித்தெடுத்தப்படுகிறது. வடிகலன் மிருதுவான இரும்பல் செய்யப்பட்டு அடிப்பாகத்தில், துளைகளோடு கூடிய உலோகத் தட்டை கொண்டிருக்கும்.  இதனுள் இலைகள் நெருக்கமாக இடைவெளியின்றி அடைக்கப்பட வேண்டும்.  இலைகளை அடைப்பதையும், எடுப்பதையும் இயந்திரங்கள் மூலமாகவும் செய்யலாம்.  இக்கலத்தின் மூடியை தேவைப்படும் போது தள்ளி வைத்துக் கொள்ளலாம். இலைகள் நெருக்கமாகவும் ஒன்று போலும், அசைக்கபடாவிட்டால் எண்ணெய் விளைச்சல் மிகவும் குறைந்துவிடும்.

கொதிகலனிலிருந்து வரும் நீராவி, ஆவியாக்குதல் முறையில் இலைகளிலிருந்து காய்ச்சி வடித்து வரும் எண்ணெயை, கண்டென்சர் கலங்கள் குளிர்வித்து அங்கிருந்து சேமிப்பு கலங்களுக்கு அனுப்புகின்றன.இந்த எண்ணெய் தண்ணீரை விட எடை குறைவாக  இருப்பதாலும், தண்ணீரில் கரையாததாலும், மேலே மிதக்கின்றது. கீழே உள்ள நீர் அடியில் உள்ள வடிகுழாய் மூலமாக வெளியேற்றப்படுகிறது.

ஒருமுறை எண்ணெய் எடுக்க சுமார் 6-8 மணி நேரமாகின்றது.  எண்ணெய் எந்த விதமான கசடுகள் அல்லது மிதக்கும் பொருட்கள் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். எண்ணெயை அலுமினிய பாத்திரங்களில் விளிம்பு வரை இருக்கத்தக்கதாக சேமிப்பு வைக்க வேண்டும்.

இவ்வாறாக மணக்க மணக்க மரிக்கொழுந்து சாகுபடி செய்து அதிக வருமானத்தை பெற்றுக்கொள்ளலாம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories