அங்கக வேளாண்மையில் மேலாண்மை!

அங்கக வேளாண்மையில் மேலாண்மை!

அங்கக வேளாண்மையில் மேலாண்மை!

ரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள், பயிர் ஊக்கிகள் ஆகியவற்றைத் தவிர்த்து விட்டுச் செய்வது அங்கக வேளாண்மை. இது இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி முறையாகும். பயிர்ச் சுழற்சி, அங்கக உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழலைக் காக்கும் பயிர் வளர்ப்பு முறையாகும்.

தற்போதுள்ள சூழலில், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவை உற்பத்தி செய்வது முக்கியத் தேவையாகும். உணவு உற்பத்தியைக் கூட்ட, செயற்கை இடுபொருள்களை மிகுதியாகப் பயன்படுத்தியதால், மண்வளம் பாதிப்படைந்து உற்பத்தித் திறன் குறைந்துள்ளது. எனவே, சுற்றுச்சூழல் மற்றும் மண்வளத்தைக் காப்பதற்கு அங்கக வேளாண்மையே தீர்வாகும். அங்கக வேளாண்மையில் குறைந்தளவில் கிடைக்கும் மகசூலை, பல்வேறு மேலாண்மை முறைகள் மூலம் கூட்ட முடியும்.

மேலாண்மை முறைகள்

பல்லுயிர்களின் பெருக்கத்தைக் கூட்ட, இயற்கை உரங்களை மிகுதியாகப் பயன்படுத்துதல். நன்மை செய்யும் உயிரிகளைப் பெருக்க, ரைசோபியம், அசோஸ்பயிரில்லம், பாஸ்போபாக்டீரியம் ஆகியவற்றைப் பயன்படுத்துதல்.

பயிர்ச் சுழற்சி

தானிய வகைகள் மற்றும் இதர பயிர்களைப் பயறுவகைப் பயிர்களுடன் சாகுபடி செய்தால் மண்ணில் தழைச்சத்து நிலை நிறுத்தப்படும். மேலும், களைகள் கட்டுப்படுவதால், இந்தக் களைகளால் ஏற்படும் சத்துகளின் இழப்புத் தவிர்க்கப்படும்.

பயிர்க்கழிவு மேலாண்மை

பயிர்க் கழிவுகளை மட்கச் செய்து உரமாகப் பயன்படுத்தினால் மண்வளம் மேம்படுவதுடன், பூச்சிகளின் தாக்குதலும் குறையும். பயிர்க் கழிவுகளை மண்புழு உரமாகவோ கம்போஸ்ட் உரமாகவோ மாற்றிப் பயன்படுத்தலாம்.

இயற்பியல், உயிரியல், உழவியல் மூலம் மேலாண்மை

இயற்பியல் முறைகளான நிலப்போர்வை அமைத்தல், சட்டிக் கலப்பை, களைக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் விளைச்சலைக் கூட்ட முடியும். உயிரியல் முறைகளின் முக்கியக் கூறுகளான, பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் விந்தைப் பொறிகளை அமைத்தல், பூச்சித் தாக்குதலைத் தாங்கும் இரகங்களைப் பயிரிடுதல், பஞ்சகவ்யா, மீன் அமிலம் போன்றவற்றைப் பயன்படுத்தல் மூலம் விளைச்சலைக் கூட்டலாம். பயிர் இடைவெளி, பருவத்தில் விதைத்தல், மட்கிய தொழுவுரம், ஊட்டமேற்றிய தொழுவுரம் ஆகிய உழவியல் முறைகள் மூலம் விளைச்சலைக் கூட்ட முடியும்.

ஒருங்கிணைந்த பண்ணையம்

அங்கக வேளாண்மையின் முக்கியக் கூறாக விளங்குவன கால்நடைகள். எனவே, அவற்றை முறைப்படி பராமரித்து அங்கக வேளாண்மைக்குத் தேவையான உரத்தைப் பெறுவது மகசூலைப் பெருக்கும் முறையாகும். மேலும், ஒருங்கிணைந்த பண்ணையத்தின் மூலம், கழிவுகள் சரியான முறையில் மறு சுழற்சி செய்யப்படுகின்றன. எரிசக்தி சேமிக்கப்படுகிறது. மண்வளம் காக்கப்படுகிறது. வேலைவாய்ப்புப் பெருகுவதால் பொருளாதார நிலை மேம்படுகிறது.

இப்படி அங்கக வேளாண்மைக்கான பல்வேறு மேலாண்மை முறைகளைக் கையாண்டால் கூடுதலாக மகசூலைப் பெற முடியும்.

முனைவர் மு.சுகந்தி, முனைவர் அ.இளங்கோ, முனைவர் ஹ.கோபி, கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம் – 603 203, காஞ்சிபுரம் மாவட்டம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories