கத்திரிக்காய்… நல்ல மகசூல் எடுக்க 

கத்திரிக்காய்… நல்ல மகசூல் எடுக்க 

 
விவசாயத்தில், ‘விதை போட்டால் பயிர் முளைத்துவிடும். காய், கனிகள் கிடைத்துவிடும். அறுவடை செய்து கொள்ளலாம்’ எனச் சுலபமாக நினைப்பவர்கள் பலர் உண்டு. ஆனால், பயிர் வளர்ப்பது அவ்வளவு சுலபமானது இல்லை. வெற்றிகரமான மகசூலுக்கு நிலம் தயாரிப்பிலிருந்து, அறுவடை வரை கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள், பூச்சி, நோய் தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடுகள்… எனப் பல விஷயங்களில் கவனம் செலுத்திச் சரியாகச் செய்தால்தான் எதிர்பார்க்கும் மகசூல் கிடைக்கும். ஒவ்வொரு பயிருக்குமான சாகுபடி நுட்பங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டால் மகசூல் இழப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
 
அந்த வகையில், கத்திரிக்காய்ச் சாகுபடியில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து… சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன் சொன்ன தகவல்கள் இங்கே…
 
“விவசாயிகள் பல நேரங்களில் நஷ்டம் அடைவதற்குக் காரணம், தாங்கள் சாகுபடி செய்யும் பயிரைப் பற்றிய புரிதல் இல்லாததுதான். எனவே பயிரைப் பற்றித் தெரிந்துகொள்வது மிக அவசியம்.
 
கத்திரியில் பலவித நாட்டு ரகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ரகமும் ஒவ்வொரு அளவில் மகசூல் கொடுக்கக்கூடியவை. அவற்றைவிட அதிக மகசூல் கொடுக்கக்கூடிய வீரிய ரகங்களும் அதிகம் உள்ளன. ஒரு ஹெக்டேர் பரப்பில் விதைக்க நாட்டு ரகங்களில் 400 கிராம் தேவை. வீரிய ரகங்களில் 200 கிராம் போதுமானது. எந்த ரக விதையாக இருந்தாலும் அதை விதைநேர்த்தி செய்ய வேண்டியது அவசியம். அதனால், முளைப்புதிறன் அதிகரிப்பதோடு, சில நோய்களும் தடுக்கப்படும்.
 
விதைநேர்த்தி :
 
விதைநேர்த்தி எப்படிச் செய்வது என்று பார்ப்போம். 40 கிராம் அசோஸ் ஸ்பைரில்லத்தைத் தேவையான அளவு அரிசி வடிகஞ்சியில் கலந்து, அதில் ஒரு ஹெக்டேர் பரப்புக்குத் தேவையான விதையை மூழ்க வைத்து எடுத்து நிழலில் இரண்டு மணி நேரம் உலர வைக்க வேண்டும். பிறகு, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் என்ற அளவில் எடுத்துக்கொண்டு, அதில் விதைகளைப் புரட்டி இரண்டு மணிநேரம் வைத்திருந்து நாற்றங்காலில் விதைக்க வேண்டும். விதைநேர்த்தி என்பது கட்டடத்துக்கான அஸ்திவாரம் போன்றது. அதைச் சரியாகச் செய்ய வேண்டியது அவசியம்.
 
நாற்றங்கால் :
 
10 அடி நீளம், 3 அடி அகலம், அரையடி உயரத்தில் மேட்டுப்பாத்தி அமைத்துக்கொள்ள வேண்டும். பாத்தியில் கல், கண்ணாடி, ஓடுகள் இல்லாமல் மண்ணைப் பொலபொலப்பாக இருப்பதுபோல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாத்தியின்மேல் பத்து சென்டிமீட்டர் இடைவெளியில் ஆள்காட்டி விரலால் வரிசையாகக் கீறி, கீறல் மீது… கோலம் போடும்போது கோலப்பொடியைத் தூவுவது போல விதைநேர்த்தி செய்த விதைகளைத் தூவ வேண்டும்.
 
பிறகு விதைகளை மண் மூடுமாறு கைகளால் கிளறிவிட்டு வைக்கோல் கொண்டு மூடி, பூவாளி மூலமாகத் தண்ணீர் தெளிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு வாரம் தண்ணீர் தெளித்து வந்தால் விதைகள் முளைத்துவரும். 10-ம் நாள் வைக்கோலை நீக்கிவிடலாம். 35 முதல் 40 நாள்களில் நாற்றைப் பறித்து நடவு செய்யலாம்.
 
விதைநேர்த்தி செய்யாமல் விதைக்கும்போது நாற்றங்கால் பருவத்தில் கழுத்தழுகல் நோய் தாக்க வாய்ப்புண்டு. இந்த நோய் தாக்கிய நாற்றுகளின் தண்டுப்பகுதி, இரண்டு விரலை வைத்து அழுத்திவிட்டதுபோல் சூம்பிப்போய் இருக்கும். பிறகு செடியின் தலைப்பகுதி கீழே சாய்ந்து நாற்று மடிந்துவிடும். இந்த நோய்க்குக் காரணம் ‘பித்தியம்’ (Pythium) என்ற பூஞ்சணம். இதைக் கொல்வதற்கான எதிர் பூஞ்சணங்கள்தான் டிரைக்கோடெர்மா விரிடியும் சூடோமோனஸும். விதைக்கும் முன், நாற்றங்காலில் 25 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது சூடோமோனஸை பொடியாகத் தூவிவிட்டும் கழுத்தழுகல் நோயைத் தவிர்க்கலாம்.
 
நடவு செய்யும் நிலத்தில் கடைசி உழவுக்கு முன்பாக ஒரு ஹெக்டேருக்கு 25 டன் அளவில் மட்கிய தொழுவுரத்தைக் கொட்டி உழவு செய்ய வேண்டும். பிறகு, இரண்டு அடி அகலத்தில் தேவையான நீளத்தில் பார்களை அமைக்க வேண்டும். 2 கிலோ அசோஸ் ஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியா 50 கிலோ தொழுவுரம் ஆகியவற்றைக் கலந்து, இக்கலவையை நடவுக்கு முன்பாகப் பார்களில் தூவ வேண்டும்.
 
நாட்டு ரகமாக இருந்தால் வரிசைக்கு வரிசை 2 அடி இடைவெளி, செடிக்குச் செடி ஒன்றரை அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். சில நாட்டு ரகக் கத்திரிச் செடிகள் அதிகமாகக் கிளைக்கக்கூடியவை. இந்த ரகங்களுக்குச் செடிக்குச் செடி 2 அடி இடைவெளி விட வேண்டும். வீரிய ரகத்துக்கு வரிசைக்கு வரிசை 3 அடி, செடிக்குச்செடி 2 அடி என்ற அளவில் இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.
 
நடவு செய்தவுடன் பாசனம் செய்யக்கூடாது. நடவுக்கு முன்பாகப் பாசனம் செய்து பார்களை ஈரமாக்கி நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 3-ம் நாளில் உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து வாரம் ஒருமுறை பாசனம் செய்தால் போதுமானது. சொட்டுநீர் மூலமாகப் பாசனம் செய்தால், மூன்று நாள்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும்.
 
ஒரு கத்திரிச் செடிக்குத் தினமும் 50 மில்லி தண்ணீர் தேவை. அதற்கு மேல் தண்ணீர் கொடுத்தாலும் செடி எடுத்துக் கொள்ளாது. நடவு செய்த 28-ம் நாளில் முதல் பூவெடுக்கும். 35-ம் நாளில் 25 சதவிகிதப் பூக்கள் எடுக்கும். 50-ம் நாளில் 100 சதவிகிதம் பூத்துவிடும். 50 முதல் 60 நாள்களில் முதல் அறுவடை செய்யலாம். நாட்டு ரகங்களாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 25 டன் முதல் 30 டன் அளவு மொத்த மகசூல் கிடைக்கும். வீரிய ரகங்களில் 60 டன் முதல் 80 டன் வரை மகசூல் கிடைக்கும்.
 
தொடர்புக்கு :
முனைவர் செந்தூர்குமரன்,
செல்போன்: 94438 69408.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories