*நிலக்கடலை வெண்ணை (Peanut butter) தயாரிப்பு முறை*
ஏழைகளின் பாதாம் என்று கூறப்படும் நிலக்கடலையில் அதிக அளவு புரதம், வைட்டமின்-இ, இரும்பு சத்து, நார்சத்து போன்றவை அதிகமாக உள்ளது. நிலக்கடலை உண்பதால் நம் உடல் வலுப்படும், இதயத்துடிப்பு சீராகும், எலும்பு தேய்மானம் குறைக்கப்படும். நிலக்கடலை நல்ல ஆற்றலை தரக்கூடிய ஊட்டச்சத்து உணவு.
இத்தகைய நற்பயன்களை கொண்ட நிலக்கடலை நம் மாநிலத்தில் அதிக அளவு விளைகிறது மற்றும் நமக்கு ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. அறுவடை காலங்களின் வருடத்திற்கு தேவையான நிலக்கடலையை வாங்கி வைத்துக் கொண்டால் அதிக விலை உள்ள காலங்களில் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். இத்தகைய நிலக்கடலையை அனைத்து காலங்களிலும் நாம் வீட்டில் ஏதாவது ஒரு வகையில் எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சத்தான சுவையான ஓர் எளிய உணவாக நிலக்கடலை வெண்ணை உள்ளது.
இந்த நிலக்கடலை வெண்ணையை, இட்லி, தோசை, சப்பாத்தி, பிரட் போன்றவற்றுடன் வைத்து உண்ணலாம். இவற்றில் எவ்வித ரசாயன கலப்பும் இல்லாமல் நம் வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம்.
*தேவையான பொருட்கள்:*
வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை – 200 கிராம்
கடலை எண்ணை (2 ஸ்பூன்) – 50 கிராம்
உப்பு (அ) சர்க்கரை – தேவைக்கு ஏற்ப
*செய்முறை:*
முதலில் வறுத்து தோல் நீக்கிய கடலையை மிக்சியில் போட்டு 1 நிமிடம் அரைக்கவும், பின் அதில் 2 ஸ்பூன், கடலை எண்ணை, சர்க்கரை (அ) உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். இதை தூய்மையான கண்ணாடி பாட்டிலில் போட்டு ப்ரிஜில் வைத்தால் 1 மாதம் வரை கெடாமல் இருக்கும். இதையே வெளியில் கைபடாமல், நீர் படாமல் உபயோகித்தால் 3-4 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இந்த எளிய முறையை பயன்படுத்தி அனைவரும் தயாரித்து பயன் அடையலாம்.
மேலும் விபரங்களுக்கு:
ICAR வேளாண் அறிவியல் மையம்,
புழுதேரி, கரூர் மாவட்டம்.
தொடர்பு எண்: 9488967675.