பயிர்களுக்கு உயிர் உரங்களின் அவசியம்!

 

பயிர்களுக்கு உயிர் உரங்களின் அவசியம்!

 

பயிர்களுக்கு உயிர் உரங்களின் அவசியம்!

யிர்களுக்குப் பயனளிக்கும் நுண்ணுயிர்களை ஆய்வகத்தில் பெருக்கி, அவற்றுக்குரிய வளர் பொருளுடன் கலந்து தயாரிக்கப்படும் இடுபொருள் உயிர் உரம் எனப்படும். இதில் தழைச்சத்தை நிலை நிறுத்தும் உயிர் உரம், மணிச்சத்தைக் கரைக்கும் உயிர் உரம் என வகைகள் உள்ளன. பயறு வகைப் பயிர்களில் தழைச்சத்தை நிலை நிறுத்தும் உரம் ரைசோபியம் எனப்படும். பயறுவகை அல்லாத பயிர்களில் இந்த வேலையைச் செய்யும் உயிர் உரம் அசோஸ்பயிரில்லம் எனப்படும். அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுவது பாஸ்போபாக்டீரியா எனப்படும்.

உயிர் உரங்களின் பயன்கள்

மண்வளத்தைப் பாதுகாத்து, நீடித்த, நிலையான வேளாண்மைக்கு வழி வகுக்கும். காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவைத் தழைச்சத்தாக மாற்றி பயிர்களுக்கு அளிக்கும். கிட்டா நிலையில் மண்ணிலுள்ள மணிச்சத்தை, பயிருக்கு எளிதில் கிடைக்கும் வகையில் மாற்றித் தரும். பயிர் வளர்ச்சி ஊக்கிகளான இன்டோல் அசிட்டிக் அமிலம், ஜிப்ரலின், பயோடின், வைட்டமின் பி ஆகியவற்றை, நுண்ணுயிர்கள் உற்பத்தி செய்வதால், பயிர்கள் செழித்து வளரும்.

நோய்களை எதிர்க்கும் சக்தியை மண்ணில் உண்டாக்கும். பயிர்களுக்கு வறட்சியைத் தாங்கும் சக்தியைக் கொடுக்கும். தழைச்சத்து, மணிச்சத்து உரங்கள் 20-25% சேமிக்கப்பபடும். மாசற்ற சுற்றுச்சூழல் ஏற்படும். இயற்கை வழிப் பண்ணையம் சிறக்க உதவும். மகசூல் 15-20% வரையில் கூடும். அந்நியச் செலவாணியை மிச்சப்படுத்தும்.

அசோஸ்பயிரில்லம்

அசோஸ்பயிரில்லம் என்பது, காற்று வெளியிலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைப்படுத்தும் ஒருவகை பாக்டீரியம். இது மண்ணில் பரவலாகக் காணப்படும். இந்த பாக்டீரியம், ரைசோபியத்தைப் போல, வேருக்குள் சென்று வேர் முடிச்சுகளை உருவாக்குவதில்லை. மாறாக, வேர்ப்பகுதியின் உள்ளும் புறமும் காணப்படும். அசோஸ்பயிரில்லம் பயிருடன் இணைந்து வாழும். தானியப் பயிர்களான நெல், சோளம், கம்பு, இராகி, மக்காச்சோளம், தினை, சாமை, பருத்தி, கரும்பு போன்ற பணப்பயிர்களுக்குத் தழைச்சத்தைக் கிரகித்து அளிக்கும்.

வேர்களிலிருந்து வெளியாகும் வேர்க்கசிவானது அசோஸ்பயிரில்லத்தைக் கவர்வதுடன், அதற்கு உணவாகவும் பயன்படுகிறது. அதற்குப் பிரதிபலனாக நைட்ராஜினேஸ் என்னும் நொதியைப் பயன்படுத்தி, காற்றிலுள்ள தழைச்சத்தைப் பயிருக்குக் கிடைக்கச் செய்கிறது. மேலும், பயிர் வளர்ச்சி ஊக்கிகளான இன்டோல் அசிட்டிக் அமிலம், ஜிப்ரலின், சைட்டோகைனின் போன்ற வேதிப்பொருள்களை உற்பத்தி செய்து பயிரின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.

அசோஸ்பயிரில்லம் எந்தப் பருவத்திலும், எந்தப் பகுதியிலும் பயன்படும் சிறப்பு வாய்ந்த நுண்ணுயிர். அனைத்து வகை மண்ணிலும் இருந்தாலும், அமில, கார நிலங்களைப் பொறுத்து இதன் செயல்திறன் வேறுபடும். இருப்பினும் அமில, காரத் தன்மைகளைத் தாங்கி வளர்ந்து பயனளிக்கும் வகைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். உலகளவில் அசோஸ்பயிரில்லத்தில் பல வகைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. லிபோ்பெரம் எனப்படும் அசோஸ்பயிரில்லம் நெற்பயிருக்கும், பிரேசிலன்ஸ் என்னும் வகையை மற்ற பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

ரைசோபியம்

ரைசோபியம் நுண்ணுயிரானது, பயறுவகைப் பயிர்களின் வேர்களில் வேர் முடிச்சுகளை ஏற்படுத்தி, கூட்டு வாழ்க்கை நடத்தும் பாக்டீரியம் ஆகும். இது வேர்களிலிருந்து வரும் கசிவுப் பொருள்களால் ஈர்க்கப்பட்டு, சல்லிவேர் வழியாக உள்ளே சென்று வேர் முடிச்சுகளை உருவாக்கும். இந்த முடிச்சுகளில் உள்ள நைட்ரோஜினேஸ் என்னும் நொதிப்பொருள் மூலம் ஆகாயத்திலுள்ள தழைச்சத்தை நிலை நிறுத்தும். இத்தகைய தழைச்சத்தை வேர் முடிச்சுகளில் சேமித்து வைப்பதால் தான் பயறுவகைப் பயிர்கள், சுழற்சி முறையில் சாகுபடி செய்யப்படுகின்றன. பயறு வகைகளுக்கு ஏற்ற ரைசோபிய வகைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும்.

பாஸ்போபாக்டீரியா

பயிர்கள் செழித்து வளரத் தேவைப்படும் முதன்மைச் சத்துகளில் தழைச்சத்துக்கு அடுத்தது மணிச்சத்து. வேர் வளர்ச்சி, இனப்பெருக்கம், கூடுதல் விளைச்சலுக்குத் தேவையான தழைச்சத்தை ஈர்த்து, பயிருக்கு அளிக்கும் பணிக்கும் மணிச்சத்து மிகவும் தேவையாகும். இந்த மணிச்சத்தானது, மண்ணில் எளிதில் பல்வேறு வேதி மாற்றங்களுக்கு உட்பட்டு, கிட்டாத நிலைக்கு சென்று விடுகிறது.

எடுத்துக்காட்டாக, மணிச்சத்தானது, அமில மண்ணில் இரும்பு மற்றும் அலுமினிய அயனிகளோடு இணைந்து அவற்றின் பாஸ்பேட்டுகளாக மாறி விடும். அதேபோல் கார மண்ணில் கால்சியம், மக்னீசியம் ஆகியவற்றுடன் இணைந்து அவற்றின் பாஸ்பேட்டுகளாக மாறிவிடும். இந்த பாஸ்பேட்டுகளைப் பயிர்களால் நேரடியாக எடுத்துக்கொள்ள இயலாது. இத்தகைய நிலைகளில் மணிச்சத்தைக் கரைத்து தரும் வேலையை பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர்கள் செய்யும்.

இந்த நுண்ணுயிர்கள் தங்கள் செல்களில் இருந்து சுரக்கும் ஃபியுமரிக், சக்சீனிக் ஆகிய அங்கக அமிலங்கள் மூலம், கரையாத மணிச்சத்தைக் கரைத்துப் பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு மாற்றிக் கொடுக்கும். மேலும், இந்த நுண்ணுயிர்கள், பாஸ்படேஸ் என்னும் நொதிப் பொருளைச் சுரந்து மணிச்சத்தைக் கரைத்துப் பயிருக்கு அளிக்கும். ரைசோபியம் மற்றும் அசோஸ்ரில்லத்துடன் பாஸ்போபாக்டீரியாவைக் கலந்து இட்டால் அவற்றின் செயல்திறன் கூடும். இது, மணிச்சத்துக் குறைந்த நிலங்களிலும், அமில வகை மண்ணிலும் நன்கு செயலாற்றி மிகுந்த பயனைத் தரும். பாஸ்போபாக்டீரியா எந்தப் பருவத்திற்கும் ஏற்ற நுண்ணுயிர் உரமாகும்.

முனைவர் வெ.செ.மைனாவதி, முனைவர் சி,வள்ளி, கால்நடை உணவியல் நிலையம், காட்டுப்பாக்கம் – 603 203, காஞ்சிபுரம் மாவட்டம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories