பயிர்சாகுபடியுடன் கலப்பு பண்ணை முறை*

பயிர்சாகுபடியுடன் கலப்பு பண்ணை முறை*

விவசாயிகள் பயிர் சாகுபடியுடன் கூடிய, கால்நடைகள், கோழி வளர்ப்பு எனப்படும் கலப்பு பண்ணை முறையை பின்பற்றினால் சிறந்த வருமானம் பெறலாம்’ என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆரம்ப காலத்தில் இருந்தே தமிழர்கள் விவசாயம் மட்டுமில்லாமல் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் வளர்ப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் விவசாயத்துக்கு தேவையான இயற்கை உரங்கள் தயாரிப்பதற்கும், வீட்டுக்குத்தேவையான பால்பொருட்கள் கிடைப்பதற்கும் வழிவகை செய்தது. அதுமட்டுமில்லாமல் விவசாயம் பொய்த்தாலும், கால்நடை வளர்ப்பில் இருந்து கணிசமான வருமானம் கிடைத்து வரும். விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்பட்டாலும் சமாளித்துக்கொள்ளும் தைரியம் இருந்தது. ஆனால் என்று கால்நடை வளர்ப்பு குறைந்து வெறும் விவசாயத்தை மட்டுமே சாகுபடி செய்ய ஆரம்பித்தனரோ, அதிலிருந்து பெரும்பாலான விவசாயிகள் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர். இதற்கெல்லாம் தீர்வாக அமைவது தான் கலப்பு பண்ணை முறைகள்.

கலப்பு பண்ணை:விவசாயிகள் ஒவ்வொருவரும் தமது தோட்டத்தில் பயிர்கள் சாகுபடிக்கு மட்டுமில்லாமல், கால்நடைகள் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆடு, மாடு, முயல், கோழி, பன்றி போன்றவைகளையும் வளர்க்கலாம்.தோட்டங்களிலே கால்நடைகளுக்கு தேவையான, புல் மற்றும் தீவனப்பயிர்களையும் ஊடுபயிர்களாக வளர்த்துக்கொள்ளலாம். அனைத்தும் ஒரே இடத்தில் அமைவதால், தினசரி தேவை, கூலி ஆட்கள் பிரச்னை மற்றும் விலைவாசி ஏற்றத்தாழ்வுகளையும் தடுக்க உதவுகிறது கலப்பு பண்ணை. கோழிப்பண்ணைகள்கால்நடைகள் மட்டுமின்றி கோழி வளர்ப்பிலும் சிறந்த வருமானம் தரும் தொழிலாகும். புறக்கடை கோழி, நாட்டுக்கோழி, கோழிக்குஞ்சு பண்ணைகள், கறிக்கோழி, வான்கோழி என பலவகையான கோழிகள் உள்ளன. கோழிகள் வளர்ப்பில் கூண்டுகள் அமைத்து வளர்க்க வேண்டும்.அதனால் நாய்கள் போன்ற மற்ற விலங்குகளிடமிருந்து, கோழிகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும். இத்துடன் வாத்து, காடை, கவுதாரி, புறா போன்றவைகளையும் வளர்த்து பயன்பெறலாம். பண்ணை குட்கைள்நிலத்தின் பள்ளமான இடத்தில் பண்ணைக்குட்டைகள் அமைத்து வீணாகச்செல்லும் தண்ணீர் மற்றும் மழைநீர் சேமித்துக்கொள்ளலாம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், பயிர்களின் வளர்ச்சியும் சிறப்பாக காணப்படும்.
இதில் மீன், தாமரை செடிகள் மற்றும் கால்நடை தீவனமான அசோலா போன்றவற்றை வளர்த்து பயன்பெறலாம். இதில் தண்ணீர் எப்போதும் இருப்பதால் கோடைகாலத்தின் வறட்சியையும் சமாளிக்க உதவுகிறது. கால்நடைகளின் தண்ணீர் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது.
தீவனங்கள் வளர்ப்பு:மானாவரி நிலங்கள் மட்டுமின்றி, தென்னை போன்ற நீண்டநாள் பயிர்களில், ஊடுபயிராக கால்நடை தீவனங்களான மசால், அகத்தி, முருங்கை, ஆல்அகத்தி, கல்யாண முருங்கை, கருவேல், கொடுக்காப்புளி, போன்ற அனைத்து வகையான தீவனப்பயிர்களையும் சாகுபடி செய்யலாம். அதே போன்று கோழித்தீவனங்களான, சோளம், கம்பு, ராகி போன்ற பயிர்களையும் சாகுபடி செய்யலாம்.
வேலிப்பயிர்கள்:அனைத்து வகையான சாகுபடி தோட்டங்களிலும் வேலிப்பயிர்கள் அமைத்திடலாம். இதனால் காற்றினால் ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்படுவதுடன், பூச்சிகள், நோய்தொற்றுகள் ஒரு தோட்டத்தில் இருந்து மற்றொரு தோட்டத்துக்கு பரவுவது கட்டுப்படுத்தப்படுகிறது. வேம்பு, கறிவேப்பிலை, அகத்தி, உட்பட பல்வேறு வகையான மரங்களையும் வேலிப்பயிர்களாக வளர்க்கலாம்.
இதுகுறித்து உடுமலை வட்டார தோட்டக்லைத்துறை உதவி இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது: கலப்பு பண்ணை முறையில், விவசாய பயிர்கள், தீவன பயிர்கள், பண்ணை குட்டைகள், கால்நடை மற்றும் கோழிகள் வளர்ப்பு என அனைத்தும் இருப்பதால் விவசாயிகளுக்கு ஒன்றில்லாவிட்டாலும், ஒன்றிலிருந்து வருமானம் கிடைக்கும்.
விவசாய பயிர்களுக்கு தேவையான இயற்கை உரங்கள் மற்றும் கோழி எரு போன்றவையும் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் கலப்பு பண்ணை அமைக்க விவசாயிகள் முன்வர வேண்டும்.ஒரு ஏக்கர் நிலம் உள்ளவர்கள் கூட அமைக்கலாம். வேலிப்பயிர்கள், ஊடு பயிர்கள் போன்றவற்றுக்கு வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு, இளங்கோவன் கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories