பயிர் சாகுபடியில் கோழி எருவின் பயன்பாடுகள்.

பயிர் சாகுபடியில் கோழி எருவின் பயன்பாடுகள்.

வேளாண் பயிர் சாகுபடியில் பயிர்கள் நன்றாக செழித்து வளர்வதற்கு பதினாறு வகை சத்துகள் மிகவும் இன்றியமையாததாகும். இவ்வகை சத்துகள் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைச் சத்துக்களாக வகைப்படுத்தப்படுகின்றன. முதல்நிலைச் சத்துகள் தழைச் சத்து, மணிச் சத்து மற்றும் சாம்பல் சத்து என்று வகைப்படுத்தப்படுகின்றன. இரண்டாம் நிலை சத்துகளில் கால்சியம், கந்தகம், மற்றும் மெக்னீசியம் அடங்கும்.

மேலும் இவைகளுடன் தாமிரம், துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு, போரான் மற்றும் மாலிப்டினம் போன்ற நுண்ணூட்டச் சத்துகளும் அடங்கும். பெரும்பாலும் விவசாயிகள் முதல் நிலை சத்துகளை பயிர்களுக்கு அளிக்கின்றனர். இரண்டாம் நிலை மற்றும் நுண்ணூட்டச் சத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இரசாயன உரங்களை இடும்போது பயிர்களுக்கு குறிப்பிட்ட ஒரு சத்து மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது.

இது மட்டுமல்லாது மண்ணில் உள்ள மண்புழு, நன்மை தரும் பாக்டீரியாக்கள், பூஞ்சாணம் போன்ற உயிரினங்களின் வளர்ச்சி மேம்படுவதில்லை. காலப்போக்கில் மண்ணின் உற்பத்தி திறனும் குறைந்து விடுகிறது. இந்த சூழ்நிலைகளை சரி செய்வதற்கு இரசாயன உரங்களோடு இயற்கை உரங்களையும் சேர்த்து விவசாயம் செய்வதுதான் நிலையான நீண்ட விளைச்சலைப் பெற வழியாகும்.

இயற்கை உரங்களில் தொழு உரம், மண்புழு உரம், ஆட்டு எரு, மாட்டு எரு மற்றும் கோழி எரு போன்றவை அடங்கும். இவைகளில் கோழி எரு மற்ற இயற்கை எருவுகளை காட்டிலும் அதிக அளவில் சத்துகளைக் கொண்டதாகும்.

பொதுவாக குப்பை எருவில் மேற்கண்ட பயிர் சத்துகள் இருக்கின்றன என்றாலும் அந்த குப்பையில் சேர்ந்திருக்கின்ற பொருட்களுக்கேற்ப பயிர் சத்துகள் அமைந்திருக்கும். விவசாயிகள் தங்கள் வீடுகளில் ஒரு சில நாட்டுக் கோழிகள் மட்டுமே வைத்திருப்பதால் அதை மற்ற குப்பை எருவோடு கலந்து பயிர்களுக்கு இடுகிறார்கள். ஆனால் கோழிப் பண்ணைகளில் அதிகமான கோழி எரு கிடைப்பதால் அதை தனி எருவாகப் பயிர்களுக்கு இடலாம்.

நம் நாட்டில் கோழிப் பண்ணைகளிலிருந்து ஒரு வருடத்தில் கிடைக்கக் கூடிய கோழி உரத்தின் அளவு 6.25லிருந்து 8 மில்லியன் டன் ஆகும். இதை சரியான முறையில் பயன்படுத்தும்பொழுது 3.25 மில்லியன் எக்டர் நிலப்பரப்பிற்குத் தேவையான உர அளவைப் பூர்த்தி செய்ய முடியும். நம் நாட்டிலுள்ள உழவர்களில் ஒரு சிலர் தவிர மற்ற அனைத்து விவசாயிகளும் மண்ணிலுள்ள நுண்ணூட்டச் சத்து குறைபாடுகளை சரி செய்வதில் ஆர்வம் கொள்ளாமல் இருக்கின்றனர்.

தற்பொழுது வளர்ந்த நாடுகளிலுள்ள விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாறியுள்ளனர். இதற்கு காரணம் என்ன என்று கூறுவோமானால் இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வும், இரசாயன உர உற்பத்தியில் ஏற்பட்டுள்ள 10 சதவீத சரிவுமாகும். ஆனால் நம் நாட்டிலுள்ள விவசாயிகள் மேற்கூறியதற்கு எதிர்மாறாக உள்ளனர். இயற்கை உரங்களைப் பயன்படுத்தாமலும், இரசாயன உரங்களை அதிகளவில் இறக்குமதி செய்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.

மக்கிய தொழு உரத்தை பயன்படுத்தும் விவசாயிகள் பலரும் கோழி உரத்தின் பயன்பாடு பற்றி அறிந்திருப்பதில்லை. ஏனென்றால் இந்தியாவிற்கு நவீன கோழி பண்ணைகளின் தோற்றம் நான்கு தலைமுறைகளை மட்டுமே கடந்துள்ளது.

பெரும்பாலான பயிர் வகைகளாகிய நெல், கரும்பு, மலர்த் தோட்டம், பணப்பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றது. ஆனால் பயறுவகைப் பயிர்களுக்கு இது உகந்தது அல்ல.

கோழிப் பண்ணைகளிலிருந்து கிடைக்கக் கூடிய உபரிப் பொருளான கோழி எருவின் தன்மையையும், அதனை விவசாயத்திற்கு பயன்படுத்தும் முறைப்பற்றி விவசாயப் பெருங்குடி மக்கள் இன்னும் சரிவர புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். விவசாயத்தில் நன்கு வளர்ச்சியடைந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் கோழி எருவின் பயனை முழுமையாக தெரிந்து வைத்து இருக்கிறார்கள். ஆனால் விவசாயத்தில் பின்தங்கியுள்ள பல மாவட்டங்களில் இன்னும் கோழி எருவினை பயன்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே பலருக்கு கோழி எருவினை விவசாயத்தில் பயன்படுத்துவது குறித்து எடுத்துரைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

கோழி எருவில் அடங்கியுள்ள சத்துகள் மற்றும் பயன்கள்.

கோழி உர பயன்பாடுகள்:

கோழி எருவினை தனியாக கம்போஸ்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை. உடனடியாக நிலங்களுக்குப் பயன்படுத்தலாம். எந்தவிதத் தீங்கும் விளைவிப்பதில்லை. கோழி எருவில் குப்பை எருவைக் காட்டிலும் சத்துகள் அதிகமாக உள்ளது. பொதுவாக குப்பை எருவில் 0.5 முதல் 2.0 சதம் தழைச்சத்து, 0.5 சதம் மணிச்சத்து, 1.0 சதம் சாம்பல் சத்து ஆகிய அளவில் இருக்கும். ஆனால் கோழி எருவில் தழைச்சத்து 1.6 சதம், மணிச்சத்து 2.0 சதம், சாம்பல் சத்து 2.0 சதம் என்ற அளவுகளில் இருப்பதால் மற்ற இயற்கை எருவைக் காட்டிலும் கோழி எரு ஒரு சத்துள்ள எருவாகும். மேற்சொன்ன சத்துகளோடு சுண்ணாம்புச் சத்தும், மக்னீசிய சத்தும் இந்த எருவில் உயர்ந்த அளவில் இருக்கிறது.

உலர்ந்த ஒரு டன் கோழி எருவினை நிலத்திலிடும் பொழுது 100 கிலோ யூரியா, 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 50 கிலோ பொட்டாஷ், 125 கிலோ கால்சியம் சல்பேட், 30 கிலோ கந்தகம், துத்தநாக சல்பேட் மற்றும் பிற நுண்ணூட்டங்களும் அளித்ததற்குச் சமமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

எந்த மண்ணிற்கு ஏற்றது?

கோழி எருவில் 25 முதல் 30 கிலோ சுண்ணாம்புச் சத்து இருப்பதால் அமிலத்தன்மை உள்ள செம்மண் நிலங்களுக்கும், செம்மண் பாறை நிலங்களுக்கும் ஏற்றது. களர், உவர் நிலங்களில் மணிச்சத்தின் அளவு அதிகமாக இருந்தாலும் பயிர்களுக்கு எளிதாகக் கிடைக்கின்ற தன்மையில் இருப்பதால் களர், உவர் நிலங்களுக்கு மிகவும் ஏற்றதாகும். இத்துடன் கோழி எருவில் கரிமப்பொருள் அதிகமாக இருப்பதால் மண்ணில் பொலபொலப்புத் தன்மை அதிகரிப்பதால் காற்றோட்டத்தையும், மண்ணில் ஈரத்தன்மையை அதிகமாக்குவதற்கும், பாதுகாப்பதற்கும் உதவுகிறது.

பயிர்களுக்குத் தேவையான அளவு:

கோழி எருவினை அனைத்து பயிர்களுக்கும் அளிக்கலாம். ஒரு டன் கோழி எருவில் சுமார் 16 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து மற்றும் 20 கிலோ சாம்பல் சத்து இருப்பதால் நெல்லுக்கு அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 1 டன் கோழி எருவுடன் 10 கிலோ யூரியா சேர்த்து போடுவது மிகவும் சிறந்ததாகும். மணிச்சத்து அதிகமாக தேவைப்படுகின்ற உளுந்து போன்ற பயறுவகைப் பயிர்களுக்கும், எண்ணெய் வித்துப் பயிரான நிலக்கடலைக்கும் மிகவும் ஏற்றதாகும். மா மற்றும் தென்னை மரங்களுக்கு ஏக்கருக்கு 1.6 டன் கோழி எருவும், மல்லிகை தோட்டத்திற்கு ஏக்கருக்கு 400 கிலோ, ரோஜா தோட்டத்திற்கு 150 முதல் 200 கிலோ வரை கோழி எருவினை பயன்படுத்தலாம்.

கோழி எருவோடு செயற்கை உரங்களின் விலையை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது 1 கிலோ தழைச்சத்து ரூ.4.50 எனவும், 1 கிலோ மணிச்சத்து ரூ.6 எனவும், 1 கிலோ சாம்பல் சத்து ரூ.2 எனவும் உள்ளது. அந்தக் கணக்கில் ஒரு டன் கோழி எருவில் உள்ள 16 கிலோ தழைச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்து ஆகியவைகளின் மொத்த விலை ரூ.295 ஆகிறது. இத்துடன் கோழி எருவில் உள்ள சுண்ணாம்புச் சத்தும், மக்னீசியம் சத்தும், கரிமப் பொருட்களும் இலவசமாகக் கிடைப்பது போலாகும். ஆகவே ஒரு டன் கோழி எருவை ரூ.300 வரை கொடுத்து செம்மண் நிலங்கள், களர், உவர் ஆகிய எந்த நிலமானாலும் போட்டு அதிக மகசூலைப் பெற்று பயனடையலாம்.
நன்றி நண்பர்களே வேளாண்மை செய்தி தொகுப்பு R.அன்பரசு.

ஆதாரம் : வேளாண் அறிவியல் மையம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories