பருத்தியில் பெருகிவரும் மக்னீசிய சத்து குறைபாடு

பருத்தியில் பெருகிவரும் மக்னீசிய சத்து குறைபாடு

அறிமுகம்

மானாவாரி பயிர்களில் பருத்தி மிக முக்கியமாக பயிரிடப்படும் பணப்பயிராகும். குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதாவது, விருதுநகர், துாத்துக்குடி, மதுரை, இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் இறவைப் பயிராகவும் பெரும்பாலும் மானாவாரியாகவும் பயிர் செய்யப்படுகிறது. பொதுவாக பயிர் சாகுபடியில் உர நிர்வாகம் என்பது மிக முக்கிய ஒன்றாகும். இந்த உர நிர்வாகம் 25 முதல் 50 சதம் வரை மகசூல் உற்பத்தியை நிர்ணயம் செய்கிறது.

பொதுவாக அனைத்து பயிர்களுக்கும் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அதிக அளவில் தேவைப்படும். இவற்றிற்கு அடுத்தபடியாக ஒவ்வொரு பயிரின் வளர்ச்சி நிலை மற்றும் நில வளத்தைப் பொறுத்து இரண்டாம் நிலை மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் தேவையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணமாக நெல் வளர்ச்சிக்கு துத்தநாக சத்து இன்றியமையாத தேவையாகக் கருதப்படுகிறது. அது போன்று பருத்தி பயிரை எடுத்துக் கொண்டால் மக்னீசியம் மிக முக்கியமான இரண்டாம் நிலை பேரூட்டச் சத்தாகும்.

பொதுவான உரப் பரிந்துரை

இறவையில் சாதாரண இரகங்களுக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் ஏக்கருக்கு முறையே 15:15:15 கிலோ என்ற அளவில் (அதாவது 32 கிலோ யூரியா, 94 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 25 கிலோ பொட்டாஷ்) கலந்து அடியுரமாக இட வேண்டும். மேலும் 15 கிலோ தழைச்சத்து உரத்தை (32 கிலோ யூரியா) இரண்டாகப் பிரித்து சப்பை மற்றும் பூக்கும் பருவங்களில் மேலுரமாக இட வேண்டும்.

மானாவாரி இரகங்களுக்கு ஏக்கருக்கு 8:8:8 கிலோ என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை (அதாவது 17 கிலோ யூரியா, 50 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 13 கிலோ பொட்டாஷ்) அடியுரமாக இட வேண்டும். இது தவிர 8 கிலோ தழைச்சத்தை (17 கிலோ யூரியா) இரண்டாகப் பிரித்து சப்பை மற்றும் பூக்கும் பருவத்தில் மேல் மழையை அனுசரித்து மேலுரமாக இட வேண்டும்.

இறவையில் வீரிய ஒட்டு இரகத்திற்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் ஒரு ஏக்கருக்கு முறையே 30:30:30 (அதாவது 65 கிலோ யூரியா, 185 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 50 கிலோ பொட்டாஷ்) என்ற அளவில் அடியுரமாக இட வேண்டும். மேலும் 30 கிலோ தழைச்சத்து உரத்தை இரண்டாகப் பிரித்து விதைத்த 45 மற்றும் 60வது நாட்களில் மேலுரமாக இடலாம்.

மக்னீசியம் சத்து செயல்பாடுகள் மற்றும் பயிரில் அசைவு

இலையில் உள்ள பச்சையத்தில் மக்னீசியம் ஒரு அங்கமாக உள்ளதால் மக்னீசியம் அளவு குறையும் போது பச்சைய உற்பத்தி குறைகிறது. பல்வேறு உயிர் வேதிய மாற்றங்களில் ஊக்குவிக்கும் கருவியாக செயல்படுகிறது. கொழுப்பு சத்து உற்பத்தியாவதிலும், மாவு பொருட்கள் மாற்றம் பெறுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சூரிய ஒளியை இலைகள் ஒளிச் சேர்க்கையில் பயன்படுத்தும் போது மக்னீசிய மூலக்கூறு அத்தியாவசிமாகிறது. பல்வேறு நொதிகளில் அங்கம் வகித்து வீரியத்தை கட்டுவதும் மக்னீசியத்தின் பணிகளாகும். ரைபோசோம் துணைப் பகுதிகள் ஒன்று சேர இச்சத்து தேவை. சாம்பல் சத்தும் சுண்ணாம்பு சத்தும் சரியான அளவில் பயன்பட உதவுகிறது.

மக்னீசிய குறைபாட்டின் அறிகுறிகள்

மக்னீசிய சத்தின் குறைபாட்டினால் இலைகள் அழகான குங்கும சிவப்பு நிறமாக மாறிவிடும். முதலில் இலைகளின் ஓரங்களில் இந்நிறம் தோன்றி பின்பு இலை முழுவதுமாக அடர் குங்கும சிவப்பு நிறமாக மாறிவிடும். முதலில் நுனி இலைகளில் இக்குறைபாடு தென்படும். பின்பு அனைத்து இலைகளுக்கும் பரவி செடி முழுவதும் பச்சை நிற இலைகளுக்குப் பதிலாக புதுவித நிறமான அடர் குங்கும சிவப்பு நிறத்துடன் தோற்றமளிக்கும். இக்குறைபாடு தற்பொழுது பரவலாக அனைத்து வயல்களிலும் தென்பட்டு விவசாயிகளின் கவனத்தை ஈர்த்து ஒரு பெரும் பிரச்சனையாகி வருகிறது. மக்னீசிய சத்து குறைபாட்டின் ஆரம்பகாலத்தில் கண்டறியப்படாமல் விட்டுவிட்டால், இலைகள் நிறம் மாறி, காய்ந்து பின்பு செடி கருகி விடுகிறது.

மக்னீசிய சத்து குறைபாடு தோன்ற காரணிகள்

  1. முதன்மையாக, மண்ணில் குறைந்த அளவு மக்னீசியம் இருப்பது.
  2. மக்னீசியம் சார்ந்த உரம் இடப்படாமல் இருப்பது.

தழைச்சத்து குறைபாடு மக்னீசிய குறைபாட்டினை ஊக்குவித்தல்.

(பொதுவாக காய் பிடிக்கும் பருவம் வரையில் தழைச்சத்து வேகமாக கிரகிக்கப்படுகிறது. இதன் பிறகு தழைச் சத்து குறைபாடு ஏற்பட்டு, மக்னீசிய சத்து குறைபாட்டையும் துரிதப்படுத்தி விடுகிறது. இதன் காரணமாக பெரும்பாலும் காய் பிடிக்கும் காலத்திற்கு பின்பு, காய் வெடிக்கும் தருணத்தில் மக்னீசிய சத்து குறைபாட்டின் அறிகுறிகள் தென்பட வாய்ப்பு உள்ளது.) குறிப்பாக டிசம்பர் – ஜனவரி மாதங்களில் அதிக அளவில் தென்படும். (இரவு நேரத்தில் அதிக குளிரும், பகலில் அதிக வெப்பமும் சேர்ந்த சூழ்நிலையாவது மக்னீசிய சத்து குறைபாட்டை ஊக்குவிக்கும் காரணியாக இருக்கலாம்.)

காய் பிடிக்கும் பருவத்தில் குறைவான மழை அளவு – நிவர்த்தி முறைகள்

  • முதலில் மக்னீசிய சத்து குறைபாடு ஏற்படக் கூடிய காரணிகளை தவிர்க்கலாம்.
  • மண்ணில் மக்னீசிய சத்தின் அளவை விவசாயிகள் அருகிலுள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்ள மண் மற்றும் தண்ணீர் பரிசோதனை ஆய்வகத்தில் கொடுத்து மண் பரிசோதனை செய்து அதன்படி உர நிர்வாகம் செய்ய வேண்டும்.
  • தொடர்ச்சியாக இக்குறைபாடு ஏற்படும் நிலங்களில் அடியுரமாக மக்னீசிய சல்பேட் 10 கிலோ ஒரு எக்டருக்கு இட வேண்டும்.
  • காய் பிடிக்கும் தருணத்தில் தழைச்சத்து மேலுரம் இட வேண்டும்.
  • காய் பிடிக்கும் பருவம் கொஞ்சம் முன் கூட்டி வரும்படி (குளிர் பருவத்திற்கு) விதைப்பு செய்ய வேண்டும். காய் பிடிக்கும் பருவம் மானாவாரியாக இருந்தால், வறட்சியை தவிர்க்க ஒன்று (அல்லது) இரண்டு மழை வந்த பிறகு விதைக்க வேண்டும். இறவைப் பயிர் எனில் நீர்பாசனம் செய்ய வேண்டும்.

வயல்களில் தென்படும் மக்னீசிய சத்து குறைபாடு நிவர்த்தி முறை

  • குறிப்பாக காய்பிடிக்க ஆரம்பிக்கும் பருவத்தில், இலைகளில் இக்குறைபாடு லேசாக தென்பட்ட உடனே, மக்னீசியம் சல்பேட் உரத்தை 0.5 சத கரைசலாக இலை வழியாக தெளிக்க வேண்டும்.
  • தெளித்து பின் மீண்டும் 15 நாட்கள் கழித்து 2வது முறை தெளிக்க வேண்டும்.
  • குறைபாடு அதிகமாக காணப்பட்டால் மூன்று முறை தெளிக்கலாம்.

கரைசல் தயாரித்தல்

50கிராம் மக்னீசிய சல்பேட் உரத்தை 10லிட்டர் தண்ணீருடன் (ஒரு டேங்குக்கு கலந்து நன்கு கரைத்து கை தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு குறைந்தது 10 டேங்க் தேவைப்படும். அதாவது 500 கிராம் (அ) அரை கிலோ மக்னீசிய சல்பேட் ஒரு தடவை தெளிப்பதற்கு தேவைப்படும். இரண்டு முறை தெளிக்க 1 கிலோ தேவைப்படும்.

மக்னீசிய குறைபாடு பற்றிய விவசாயிகளின் கருத்து கண்ணோட்டம்

பொதுவாக விவசாயிகளுக்கு மக்னீசிய சத்து குறைபாடு பற்றி விரிவான கருத்து இல்லை. ஒரு சிலர், பருத்தி காய் பிடித்து வெடிக்கும் தருணத்தில் இலை அமைப்பு இவ்வாறு இயற்கையாகவே மாறிவிடுவதாக கருத்து கொண்டுள்ளனர். ஒரு சிலர், இயற்கையாக மற்ற செடிகள் காய்த்து ஓய்ந்த பின் இலை கருகுவது போல் இதன் இலையும் கருகிவிடுவதாக எண்ணுகின்றனர். இதுவே மானாவாரி பயிர் எனில், விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையால் கருகுவதாக நினைக்கின்றனர். இறவைப் பயிர் எனில் தழைச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படலாம் என சிலர் கூறினர். உண்மையில் பருத்தியில் குங்கும சிவப்பு இலை, மக்னீசிய சத்து குறைபாடு காரணமாக வருகிறது என்பது உழவர்கள் அறியாத ஒன்றாக இருந்து வருகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories