தமிழர் பாரம்பரியம் அறிவோம் பதிவின் தொடர்ச்சி
….
பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகைகள்
1.அருந்துதல்f – மிகச் சிறிய அளவே
உட்கொள்ளல்.
2.உண்ணல் – பசிதீர உட்கொள்ளல்.
3.உறிஞ்சல் – வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
4.குடித்தல் – நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
5.தின்றல் – தின்பண்டங்களை உட்கொள்ளல்.
6.துய்த்தல் – சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
7.நக்கல் – நாக்கினால் துழாவி உட்கொள்ளுதல்.
8.நுங்கல் – முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
9.பருகல் – நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
10.மாந்தல் – பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
11.மெல்லல் – கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
12.விழுங்கல் – பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.
ஆகியனவாகும்.
தமிழர்கள் கைகளை நீரில் கழுவிய பின்னர்,சம்மணமிட்டு தரையிலமர்ந்து வாழையிலையில் பரிமாறிய உணவு வகைகளை ஒரு கையினால் (பொதுவாக வலதுகை) உணவு உண்ணும் வழக்கம் கொண்டவர்கள். இது கரண்டி, முள்ளுக்கரண்டி, கத்தி போன்ற கருவிகளை பயன்படுத்தி உணவுண்ணும் மேலைநாட்டு வழக்கத்துக்கும் குச்சிகள் (chop sticks) போன்ற கருவிகளை பயன்படுத்தி உணவுண்ணும் சீன வழக்கத்துக்கும் மாறுபட்ட வழக்கம் ஆகும்.
தமிழர்கள் விரும்பி உண்ணும் சோறு, இடியப்பம், புட்டு, தோசை போன்ற உணவுகளையும் கறிகளுடன் கைகளால் உண்ணுவதே இலகு. குறிப்பாக கறிகளை ஏற்ற அளவுக்கு சேர்த்து உண்ணுவதற்கு கைகள் பயன்படுகின்றன.
தமிழர்கள் தரையில் தடுக்குகள் இட்டு அல்லது தாள் (மனைப்பலகை) இருக்கைகளில் அமர்ந்து உணவு உண்ணுதலை வழக்கமாக கொண்டிருந்தனர். உணவு உண்ணும்போது பேசுவதை நற்பழக்கமாகக் கருதுவதில்லை.
தமிழர்கள் பெரும்பாலும் விருந்தோம்பலின் போது வாழையிலையில் தான் பரிமாறுவர். அவ்வாறு பரிமாறும் போது ஒரு சீரான உணவு பரிமாறும் முறையை கடைபிடிக்கின்றனர். அதாவது வாழையிலை எவ்வாறு பந்தியில் வைக்கவேண்டும் என்பதிலிருந்து எவ்வகையான உணவை வாழையிலையில் எங்கு வைக்க வேண்டும் என்பதுவரை அனைத்திற்கும் சில வழிமுறைகளை வைத்துள்ளனர்.
பண்டைய காலத்தில் எவ்வாறு உணவு சமைப்பது நிலப்பாகுபாடு வாரியாக வேறுபட்டதோ,அதேபோல் 15ம் நூற்றாண்டிற்கு பின் வட்டார வாரியாக சமையல் கலை கீழ்கண்ட வாறு வேறுபட்டுள்ளது.
ஈழத்தமிழர் சமையல்,
மதுரைச் சமையல்,
கொங்கு நாட்டு சமையல்,
செட்டிநாடு சமையல்,
அந்தணர் சமையல்,
சேலம் சமையல்,
நெல்லை சமையல்,
இஸ்லாமியத் தமிழர் சமையல்,
கிராமியத் தமிழர் சமையல்,
கனடியத் தமிழர் சமையல், போன்று தமிழ் சமையல் காலத்திற்கேற்றவாறும்
இடத்திற்கேற்றவாறும் மாறுபட்டாலும்,நறுமண தாளித பயிர்களின் சுவையோடு பண்டைய நாகரீகமும் கலாச்சாரமும் மாறாமல்
தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
இடையில் வழக்கொழிந்து போன சிறுதானிய உணவு,மரச்செக்கில் ஆட்டப்பட்ட கடலை,எள் மற்றும் விளக்கெண்ணை யின் பயன்பாடு,ஆவியில் வேக வைத்த உணவுகள் போன்றவை பற்றிய விழிப்புணர்வின் காரணமாக அவை மீண்டும் இயற்கை உணவு என்ற பெயரில் மறுஅவதாரம் எடுத்துள்ளன.பல நோய்களின் தாக்கத்தால் மக்கள் உணவே மருந்து என்ற பண்டைய தமிழர் கோட்பாட்டை பின்பற்ற வேண்டிய சூழ்நிலையை இயற்கையே படைத்துள்ளது.
தமிழ் மொழி எப்படி பிறமொழி தாக்கத்திலிருந்து பல்லாயிரம் ஆண்டுகளாக சிறந்தோங்கி தன் தனித்தன்மையை தக்க வைத்து வாழ்ந்து வருகிறதோ அதே போன்று தமிழர்கள், தமது உணவு பழக்க வழக்கங்களையும், தம் முன்னோர்களின் உணவு பழக்க வழக்கத்திலிருந்து பெருமளவில் மாறுபடாமல் தக்க வைத்து, தம் பண்பாட்டை காத்து வருகின்றனர் என்பது பெருமைக்குரிய வரலாற்று உண்மை.அதுபோல
பண்பாடு என்பது ஒரு இனத்தின் நாகரீகம் மட்டுமல்ல அவ்வினத்தின் வாழ்வியல் நெறி என்பதில், தமிழர்களின் பண்டைய உணவு முறைகளும் ஒன்று என்பதை வருங்கால சந்ததினருக்கு எடுத்துச் செல்வது நம் அனைவரின் கடமையாகும்.
தொகுப்பு:
Agri.இரா.அரவிந்தன்.
Rtd.Hoticilture.
நன்றி திரு Agri அரவிந்தன் 🙏