வேளாண்மையில் வேம்பு முக்கியப் பங்கினை வகிக்கிறது. எப்படி?…

விவசாயிகள் பொதுவாக பூச்சி நோய்களை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகம் பயன்படுத்துவதால் வயலில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்த்து அழிக்கப்படுகின்றது. மேலும், சுற்றுப்புற சூழலும் மாசுப்படுத்தப்படுகிறது.

இதனை தவிர்க்க விவசாயிகள் தாவர பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பூச்சி/நோய்களை கட்டுப்படுத்தலாம்.

வேம்பின் அனைத்து பாகங்களும் விவசாயிகட்கு பயன்படுகிறது. தழையை உரமாகவும், மாடுகட்கு தீவனமாகவும், பூச்சிக் கொல்லியாகவும், வேப்பம் புண்ணாக்கை உரமாகவும் யூரியா போன்ற ரசயான உரத்துடன் கலந்து இட்டு யூரியாவின் பயனை அதிகரிக்கச் செய்யவும் வேப்பெண்ணைய்யை தனியாகவும், இதர பூச்சி மருந்துகளுடன் கலந்து பூச்சி நாசினியாகவும் பயன்படுகின்றன.

வேப்பிலை:

வேப்பிலையில் தழைச்சத்து 2.5%, மணிச்சத்து 0.6%, சாம்பல்சத்து 2.0% அளவில் உள்ளன. இதனை நன்செய் நிலங்களுக்கு இடலாம். வேப்பந்தலை இட்ட நிலத்தில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுவின் தாக்குதல் வெகுவாக குறைந்துவிடும். உலர்ந்த வேப்பிலைகளை நெல்/சோளம் போன்ற தானியங்களுடன் கலந்து வைத்து வண்டுகள், அந்துகள் தூலைப்பான்களின் தாக்குதலிலிருந்து தடுக்கலாம்.

வேப்பங்கொட்டை கரைசல்:

பத்துகிலோ வேப்பங்கோட்டையை நன்கு தூளாக்கி 20 லிட்டர் நீரில் கரைத்து ஒரு நாள் வைத்திருந்து வடிகட்டி 200 லிட்டர் நீர்சேர்த்து ஒட்டும் திரவம் 200 மில்லி (அல்லது) 100 கிராம் காதிபார் சோப்பு சேர்த்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவேண்டும்.

வேப்பங்கொட்டை கரைசல் தெளிப்பதன் மூலம் பயிர்களில் தோன்றும் கம்பளி புழுக்கள், அசுவினிகள், தத்துப்பூச்சிகள், புகையான் இலைசுருட்டுப் புழு, ஆணைகொம்பன், கதிர் நாவாய்ப்பூச்சிக ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம். பயிர்களை தாக்கும் சாம்பல்நோய், மஞ்சள் வைரஸ் நோய் முதலியவைகளை கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் கரைசல் பயன்படும்.

மூன்று சத வேப்பெண்ணெய் கரைசல் தயாரிக்க:

3 லிட்டர் வேப்பெண்ணெய் உடன் 200 மில்லி ஒட்டும் திரவம் (அல்லது) காதி துணி சோப் நன்றாக கலந்து 200 லிட்டர் நீர் சேர்த்து பயன்படுத்தலாம்.

வேப்பம் புண்ணாக்கு:

வேப்பம் புண்ணாக்கில் தழைச்சத்து 5.2%, மணிச்சத்து 1.1%, சாம்பல்சத்து 1.5% உள்ளன. வேப்பம் புண்ணாக்கை யூரியாவுடன் 1:5 என்ற விகிதத்தில் (அதாவது 1 பங்கு வேப்பம் புண்ணாக்கு; 5 பங்கு யூரியா) கலந்து இட்டால் யூரியாவின் சத்து, பயிருக்கு நீண்ட நாட்கள் கிடைக்க உதவுகின்றது. தழைச்சத்து வீணாவதும் குறைகின்றது.

நொச்சி, வேம்பு, தழை கரைசல்:

நொச்சித்தழை 5 கிலோ மற்றும் வேம்பு தழை 5 கிலோ ஆகியவற்றை ஒரு பானை நீரில் போட்டு கொதிக்கவைத்து அதனை கூழாக்கி ஓர் இரவு வைத்திருந்த பின்னர் வடிகட்டி அதனை 100 லிட்டர் நீரில் கலந்து 1 ஏக்கர் அளவில் தெளித்து நெற்பயிரில் இலைசுருட்டுப்புழு, குருத்துப்புழு மற்றும் கதிர்நாவாய்ப்பூச்சியினை கட்டுப்படுத்தும். நொச்சி மற்றும் வேம்பு தழையினை அரைக்க வசதியுள்ள இடங்களில் கொதிக்க வைக்கவேண்டிய அவசியமில்லை.

வேம்பில் அசாடிரக்டின், நிம்பிசிடின் போன்ற ரசாயன பொருட்கள் இருப்பதால் பூச்சி / நோய் தடுப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகின்றது. எனவே, எந்தவித பாதிப்பின்றி சிக்கனமாக வேம்பின் அனைத்து பாகங்களையும் பயன்படுத்தி தாங்கள் பயிரிடும் விளைபொருட்களையும் பூச்சி நோய்களின்றி எளிதாக காப்பற்றலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories