மாடித் தோட்டம் அமைப்பது எப்படி?

மாடித் தோட்டம் அமைப்பது எப்படி?

மாடித் தோட்டம் என்றவுடன் நம் நினைவில் இருப்பது மேற்கூரை (காங்கிரீட்) பாதுகாப்பாகும் . மேற்கூரையை பாதுகாப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிகள்.மாடியில் உள்ள தளத்தில் இரப்பர் கோட் பெயிண்ட் அடிக்க வேண்டும்.

அதிக கனம் இல்லாத ஜாடிகள், மண் தொட்டி என்றால் டெரகோட்டா மண் தொட்டி, மாடித் தோட்டத்திற்கென்றே வடிவமைக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள், ப்ளாஸ்டிக் தொட்டிகள் அல்லது சுத்தம் செய்யப்பட்ட பெயிண்ட் வாளிகள் இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

இடுபொருள்கள்

ஒரு தாவரம் நன்கு வளர வேண்டுமென்றால் வளமான மண் தேவை. ஆனால் மண்வைத்து மாடித் தோட்டம் அமைத்தால் மாடி காங்கிரீட் விரைவில் பலமிழந்துவிடும். ஆகையால் மண்ணிற்கு பதிலாக நல்ல வளமான இடுபொருட்களை இட வேண்டும். மாட்டுச்சாணமும், மக்கிய தேங்காய் நார் கழிவுகளும் கனமில்லாத வளமான இடுபொருள்களாகும். தேங்காய் நார் கழிவுகள் கேயர்கேக் வடிவில் கிடைக்கின்றது. மக்கிய மாட்டுச்சாண‌ம் கிடைக்கவில்லை என்றால் காய்ந்த எருவாட்டியை பயன்படுத்தலாம். தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கும், மாட்டுச்சாண‌ம் ஒரு பங்கும், சமையலறை கழிவு ஒரு பங்கும் இட்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.

காய்கனிகள் தேர்வு செய்தல்

மாடித் தோட்டத்திற்கு நாட்டு காய்கனிகள் மிகச் சிறந்தவை. செடிக்காய்களான வெண்டைக்காய், மிளகாய், கொத்தவரங்காய் ஆகியவை சின்னபைகளில் நேரடியாக விதைக்கலாம். இவற்றில் கத்தரிக்காய், மிளகாய், தக்காளி மட்டும் விதைத்து நாற்று மூலம் நடவு செய்ய வேண்டும்.

அவரை, பூசணி, சுரைக்காய், புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றை பெரிய பை அல்லது 20லிட்டர் வாளிகளில் நடலாம். இவற்றில் அவரை, புடலங்காய், பாகற்காய் கொடி காய்களாகும், அவற்றை பந்தலிட்டு படரவிட வேண்டும். அவரைகாயில் கொடியும் உள்ளது, செடியும் உள்ளது.

குற்று மரங்கள்

குற்று மரங்கள் என்று சொன்னால் பூ மரங்கள், பழ மரங்கள் என இருவகைகளாக பிரிக்கலாம்.

பழ மரங்கள்

பழ வகைகளில் மாதுளைக்கு 50லிட்டர் கொள்ளளவு கொண்ட ப்ளாஸ்டிக்பை அல்லது 50 லிட்டர் டிரம்களை பயன்படுத்தலாம். முருங்கை, கொய்யா, வாழைக்கு 75 லிட்டர் முதல் 100 லிட்டர் டிரம்களை பயன்படுத்தலாம்.

பூ மரங்கள்

இட்லிபூ (வெட்சி), செவ்வ‌ரளி, மஞ்சளரளி ஆகியவற்றை 20லிட்டர் பெயிண்ட் வாளிகளில் வளர்க்கலாம்.

பூச்செடிகள்

பூச்செடிகள் என்றால் மல்லிகை, முல்லை, பிச்சி, ரோஜா, சாமந்தி (செவ்வந்தி), சம்மங்கி ஆகியவற்றை மொட்டைமாடித் தோட்டத்தில் பயிரிடலாம். அவற்றில் கொடி வகைகளான மல்லிகை, முல்லை, பிச்சி ஆகியவற்றை 50லிட்டர் டிரம்களில் வளர்க்கலாம். இவற்றை பந்தலிட்டு கொடியாகவும் வளர்க்கலாம் கவாத்து செய்து குற்று செடியாகவும் வளர்க்கலாம். ரோஜாவை 10லிட்டர் வாளிகளில் வளர்க்கலாம்.

குறிப்பு :

ரோஜாவகைளில் எட்வர்டு ரோஸ் (பன்னீர் ரோஸ்), ஆந்திரரெட், செவன்டே ரோஸ் ஆகியவை சிறந்தன. இவை எல்லாவகை காலநிலைக்கும் உகந்தவை.

சாமந்தியில் வெள்ளை மற்றும் மஞ்சள் சிறந்தவை. இவை குளிர்ச்சியான காலங்களில் மட்டும் பூக்கும். மலைவாழ்நிலங்களில் எல்லா பருவங்களிலும் பூக்கும்.

கீரை வகைகள்

கொத்தமல்லி, புதினா, பாலாகீரை, காசினிகீரை, தண்டுக்கீரை, சிறுகீரை, வெந்தயக் கீரை, அரைக்கீரை, வல்லாரைக்கீரை, பொன்னாங்கனிக்கீரை, மிளகுதக்காளிக்கீரை, ஆகியவற்றை வீட்டு மாடித் தோட்டத்தில் பயிரிடலாம்.

கீரைகளில் – கொத்தமல்லி, சிறுகீரை, அரைக்கீரை, பாலாகீரை, தண்டுக்கீரை, வெந்தயக் கீரை, மிளகுதக்காளிக்கீரை ஆகியவற்றை விதைகள் மூலம் உற்பத்தி செய்யலாம்.

புதினா, பொன்னாங்கனிக்கீரை ஆகியவற்றை குச்சி (போத்துகள்) மூலம் நடவு செய்து உற்பத்தி செய்யலாம்.

வல்லாரைகீரை மட்டும் வேர்கள் மூலம் நடவு செய்து உற்பத்தி செய்ய முடியும்.

பிளாஸ்டிக் டிரம் மற்றும் வாளிகளை பயன்படுத்தும் முறை

பிளாஸ்டிக் டிரம் மற்றும் வாளிகளை பயன்படுத்தும் போது நன்கு சுத்தம் செய்தல் வேண்டும்.

அதிகப்படியான தண்ணீர் செடியின் அருகில் இருந்தால் செடியின் வேர்கள் அழுகிவிடும். ஆகையால் தண்ணீர் வெளியேற டிரம் மற்றும் வாளிகளின் அடிப்பகுதியில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் துளை இட வேண்டும்.

பிளாஸ்டிக் டிரம் மற்றும் வாளிகளை பயன்படுத்தும் போது அவற்றில் மண்புழுக்கள் வராது.

வீட்டுத்தோட்டம் அமைக்கும் முறைகள் :

வளர்க்கப்போகும் செடியின் அளவுக்குத் தகுந்த தொட்டிகளையோ, பைகளையோ தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றில், தென்னை நார்க்கழிவு, மணல், வண்டல் மண், செம்மண், தொழுவுரம், ஆட்டு எரு, மண்புழு உரம் ஆகியவற்றை சம அளவில் கலந்து.. தேவையான விதைகளை நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு தொட்டியிலும் அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ் ஆகிய உயிர் உரங்களில் தலா 100 கிராம் இட வேண்டும்.

நடவு செய்த செடிகளில் பிஞ்சுப்பருவம் வரும்போது, ஒவ்வொரு தொட்டியிலும் 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கு இட வேண்டும். அமுதக்கரைசல், பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றை தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். செடிகள் வாடும்போது பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். பூச்சிகள் தென்பட்டால் பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். பூ பிடிக்கும் பருவம், பிஞ்சுப் பருவத்தில் மீன் அமினோ அமிலம், அமுதக்கரைசலைத் தெளிக்க வேண்டும். அனைத்துக் கரைசல்களையும் ஒரு லிட்டருக்கு 30 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.

மேற்கூறிய முறையில் மாடித் தோட்டம் அமைக்கலாம்.

 மொட்டை மாடி, பால்கனித் காய்கறி தோட்டம்
அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கும் லட்சுமி, ஸ்ரீராம் தம்பதி, பால்கனியில் உள்ள செடி, கொடிகளிடம் பேசுவார்கள். இன்றைய பொழுது சிறப்பாக இருக்க உதவும், மனதிற்கு ஆறுதல் தரும் ஆலயம் இது என்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாகக் காய்கறித் தோட்டம் வளர்ப்பதில் ஊக்கமும் ஆர்வமும் உள்ள இந்தத் தம்பதி, இந்தத் தோட்டம் உளவியல் ரீதியாக மனதிற்கு இரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.
இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வாடகை வீட்டில், பார்ப்பவர் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தக் காய்கறித் தோட்டத்தை வளர்த்துவருகின்றனர். வாடகை வீட்டில் தோட்டம் போட முடியுமா? அதற்கு இடமும் நேரமும் இருக்குமா? அதைப் பராமரிப்பது சாத்தியமா? இப்படிப் பல சந்தேகங்களுக்கு அவர்களிடமிருந்து “முடியும்” என்று பதில் வருகிறது. மனம் இருந்தால் எதுவும் சாத்தியம்தான் என்கிறார்கள்.
‘‘எங்க வீட்டு பால்கனித் தோட்டம் பீர்க்கங்காய், புடலை, வெள்ளரி, வெற்றிலைக் கொடின்னு விதவிதமாக இருக்கு’’ எனப் பெருமை பொங்கச் சொல்லும் லட்சுமி ஸ்ரீராம், தன் அனுபவத்தையே காய்கறித் தோட்டம் பற்றிய பாடம் ஆக்குகிறார்.
“என்னோட சொந்த ஊர் கேரளா. நான் சின்ன வயசாக இருக்கும்போது, தோட்டத்துல என் பாட்டி வளர்க்கிற கீரையை வேடிக்கை பார்க்கிறதுதான் எனக்குப் பிடிச்ச பொழுதுபோக்கு. அரைக்கீரை சாப்பிட்டா, இரும்புச் சத்து மாத்திரையே தேவையில்லைன்னு சொல்லி பாட்டி வளர்க்கிற கீரை நல்ல உயரத்துக்கு வரும். அதோட விதையை சேகரிக்க, அதை சாம்பல்ல கலந்து மறுபடியும் விதைப்பாங்க. எதுக்கு பாட்டி சாம்பல்னு கேட்டா அப்பதான் விதையை எறும்பு சாப்பிடாதுன்னு சொல்லிக் கொடுப்பாங்க.” அந்தப் பாட்டிதான் செடி வளர்க்கும் ஆர்வத்தை இவருக்குள் விதைத்துள்ளார்.
மேற்கொண்டுஅவரிடம்பேசிக் கொண்டிருந்ததில் காய்கறிகள் பற்றிப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அவரிடம் பேசியதிலிருந்து சில பகுதிகள்:
கோடைக் காலத்திற்கு ஏற்ற முறையில் என்னென்ன பயிரிடலாம்?
புடலங்காய், தர்ப்பூசணி, பாகற்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி.
மழைக்காலத்திற்கு?
அவரைக்காய், காராமணி, கொத்தவரங்காய்

குளிர்காலத்திற்கு?
முட்டைகோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, கேரட், கொடமிளகாய்
மண்தொட்டியில் செடி, கொடிகள் வளர்ப்பதற்கும், ப்ளாஸ்டிக் போன்றவற்றில் செடி, கொடி வளர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?
மண் தொட்டியில் செடி, கொடிகளைப் பயிரிடுவதே நல்லது. தேவைக்கு அதிகமான தண்ணீரை மண்தொட்டி உறிஞ்சிக்கொள்ளும். மீதமுள்ள தண்ணீர் சிறு துளை வழியாக வெளியேறும்.

அதிகப்படியான நீரை உறிஞ்சிக்கொள்ளும் திறன் பிளாஸ்டிக் போன்ற பொருட்களுக்குக் கிடையாது. அதிகப்படியான நீர் வேரில் தங்கி, நாளடைவில் வேர் அழுகி செடி, கொடிகள் வளர்ச்சி குன்றத் தொடங்கும்.
மண்தொட்டியில் செடி, கொடிகள் வளர்க்கத் தேவையான வழிமுறைகள் என்ன?
1 பங்கு செம்மண், 3 பங்கு ஆற்று மணல் கலந்த கலவையே செடி, கொடிகள் வளர்வதற்கு ஏற்ற மண் கலவை. விதை ஊன்றிய பதினைந்து நாட்களுக்குப் பிறகு இயற்கை உரங்களான ஆட்டுப் புழுக்கை, மாட்டுச் சாணம், வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை இயற்கை உரமாகத் தூவலாம்.
மொட்டை மாடி, அடுக்குமாடிக் குடியிருப்பில் மண்தொட்டியில் தாவரம் வளர்ப்பதால் கட்டிடத்திற்கு ஏதேனும் பாதிப்புகள் உண்டாகுமா?

ஒரு பாதிப்பும் ஏற்படாது. மண் தொட்டியில் செடி, கொடிகள் பயிரிடப்படும்போது, அதிகப்படியான நீரை மண் தொட்டி உறிஞ்சிக்கொள்ளும்.
வாடகை வீட்டில் இருந்துகொண்டு செடி வளர்ப்பதில் ஏற்பட்ட அனுபவங்களில் ஏதேனும் ஒன்றைச் சொல்லுங்கள்?.
பல அனுபவங்கள் உண்டு. ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்குக் குடி புகும்போது முதலில் நான் பார்க்க விரும்புவது, செடி, கொடி வளர்க்க இடம் கிடைக்குமா? என்பதுதான். வீட்டுச் சொந்தகாரரின் அனுமதி பெற்றுத்தான் காய்கறித் தோட்டம் போடுகிறேன். இராஜா அண்ணாமலைபுரத்தில் ஸ்கூல் வ்யூ தெருவில் ஒரு வாடகை வீட்டில் இருந்தோம். அங்கு மொட்டை மாடியில் 140 மண் தொட்டிகள் வைத்து, காய்கறித் தோட்டம் அமைத்தோம். செம்பருத்தி, ரோஜா, மல்லிகை, முட்டை கோஸ், வெற்றிலை என விதவிதமான செடி, கொடிகளை வளர்த்துவந்தோம். வீடு காலி செய்ய வேண்டும் என்கிற சூழ்நிலையில், அத்தொட்டிகளை நன்கு பராமரிக்கக்கூடிய சில நண்பர்களிடம் கொடுத்துவிட்டு, ஒரு சில தொட்டிகளே வைத்துக்கொள்ள முடிந்தது. மண் தொட்டிகளைப் பிரிய மனம் இடம் கொடுக்க வில்லை. அது மறக்க முடியாத அனுபவம்.
மண் தொட்டியில் செடி, கொடிகள் முழுமையான வளர்ச்சியை அடையாததற்குக் காரணம் என்ன?
நான் தினமும் எழுந்தவுடன் என் வீட்டு பால்கனி தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளிடம் பேசுவேன். வெற்றிலைக் கொடியைக் கண்ணில் ஒற்றிக்கொள்வேன். பூத்துக் குலுங்கும் மல்லி, ரோஜா இதழ்களைத் தடவிக் கொடுப்பேன். பிஞ்சு விட்டுக்கொண்டிருக்கும் கத்திரி, வெண்டைக் காய்களை முத்தமிடுவேன். இவ்வாறு, நாம் நம் வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளைப் பேரன்புடன், பாதுகாத்துவந்தால் நான் ஏற்கெனவே குறிப்பிட்ட மண் கலவையில் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம். எல்லாவற்றிற்கும் நம் மனம்தான் காரணம். தாவரத்திற்குத் தண்ணீர் ஊற்றிவிடுவதோடு நம் கடமை முடிந்து விடவில்லை. நம்மைப் போல தாவரத்திற்கும் உயிர், உணர்வுகள் உண்டு.
“ஏன் நீ காய்க்க மாட்டாய்?, ஏன் நீ பூக்கவில்லை?’’ எனக் கேள்வி கேட்பதை விட, அத் தாவரங்களிடம் புன்னகை செய்யுங்கள். “நீ நன்றாக வளர்வாய்!” என்று வாழ்த்துக்களைச் சொல்லிவாருங்கள். நீண்ட காலம், வளமுடன் இருக்கும். செடி, கொடிகள் நன்கு வளரும்.

 

 

 

 

இயற்கை AC , நகரத்து மாடி தோட்டம்

மொட்டைமாடித் தோட்டம், மழைநீரைக் குடிநீராக்கும் ஏற்பாடு, கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் தொழில்நுட்பம் எனத் தன் வீட்டுத் தேவைகளை ஆரோக்கியமான முறையில் நிறைவேற்றிக்கொள்கிறார் இந்திரகுமார்.
”நல்ல காற்று, நல்ல உணவு, நல்ல தண்ணீர் இந்த மூன்றும்தான் மனித வாழ்வுக்கு அடிப்படை. இவற்றை நம் வீட்டிலேயே செய்துகொள்ள முடியும். முதலில் தண்ணீர். ஒரு தொட்டி அமைத்து மழை நீரைச் சேகரிக்கலாம். மழை நீரைச் சாக்கடைக்குள்விட்டு, அது கடல் நீரில் கலந்து, அப்புறம் கடல் நீரைக் குடிநீராக்கும் கூத்துக்குப் பதிலாக, முறையாக மழை நீரைச் சேகரித்தாலே தண்ணீர் பிரச்னை தீர்ந்துவிடும். மிகக் குறைந்த பரப்புள்ள மொட்டை மாடி இருந்தாலே, ஆறு ஆயிரம் லிட்டர் மழை நீரைச் சேகரிக்கலாம்.
வெட்டிவேரைத் தண்ணீர் உள்ள தொட்டிக்குள் போட்டுவைத்தால், எல்லா அசுத்தங்களும் அடங்கித் தெளிவடைந்துவிடும். அதைச் செப்புப் பாத்திரத்தில் எடுத்து தேற்றான்கொட்டைகளைப் போட்டால்,
குடிநீர் தயார். யுரேனியத்தையே சமநிலைப்படுத்தும் தன்மை உள்ள தேற்றான்கொட்டைகள் நம் ஊரில் சாதாரணமாகக் கிடைக்கின்றன. இது எல்லாம் இடவசதி குறைவான நகரத்து வீடுகளுக்குத்தான்.
இதுவே கிராமம் என்றால், ஒரு கிணறு வெட்டி மொத்த மழைநீரையும் அதற்குள் விட்டுவிடலாம். அதில் இருந்து எடுத்து செப்புப் பாத்திரத்தில் வைத்து குடிக்கவும் சமைக்கவும் பயன்படுத்தலாம். என் வீட்டில் இப்படித்தான் செய்கிறேன்.
கேன்களில் அடைக்கப்பட்ட நீர் எத்தனை மாதங்கள் பழையது என்றுகூடத் தெரியாத நிலையில், இந்த எளிய முறையைச் சாத்தியமுள்ள எல்லோரும் செய்தால் தண்ணீர் பிரச்னையும் தீரும், நல்ல ஆரோக்கியமான நீரும் கிடைக்கும். 100 சதுர அடி மொட்டை மாடி இருந்தாலே வருடத்துக்கு 10 ஆயிரம் லிட்டர் மழை நீரைச் சேகரிக்க முடியும்.
100 அடி சுற்றளவுகொண்ட வீட்டு மொட்டைமாடியில் பாதைக்கு 5 அடி விட்டுவிட்டால் மிச்சம் 95 அடிகள் கிடைக்கும். இது சதுர அடி கணக்கில் 155 சதுர அடி வரும். சென்னைக்குள் 155 சதுர அடி நீளத்தில் நீங்கள் விவசாயம் செய்யலாம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? 800 சதுர அடி பரப்புள்ள என் வீட்டு மொட்டை மாடியில் 40 மூலிகைகள் உள்பட 150 வகையான செடிகள் இருக்கின்றன. மொட்டைமாடித் தோட்டம் என்றதும் எல்லோரும் பயப்படும் முதல் விஷயம் தண்ணீர் பிரச்னை! ஐந்து பேர்கொண்ட குடும்பத்தில் சமையல் அறையில் மட்டும் நாள்தோறும் 30 முதல் 40 லிட்டர் தண்ணீர் வீணாகிறது. இதை முறைப்படுத்தினாலே கழிவு நீரை மாடித் தோட்டத்துக்குப் பயன்படுத்த முடியும். மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரை ஒட்டியதுபோல ஒரு தொட்டி அமைத்து அதற்குள் மண் பரப்பி எந்தச் செடியையும் வளர்க்க முடியும். புதிதாக வீடு கட்டுபவர்கள் கட்டும்போதே இதற்கான ஏற்பாட்டைச் செய்வது நல்லது. இதுக்கூடச் சிரமம் என்றால் மிக எளிய வழி, பானையில் செடி வளர்ப்பது. 20 சதுர அடியில் பானைத் தோட்டம் போட்டாலே, ஒரு குடும்பத் துக்குப் போதுமானது. கத்தரி, வெண்டைக்காய், தக்காளி, கொத்தவரங்காய், மிதி பாகற்காய், காராமணி என நம் ஊர்க் காய்கறிகள் அனைத்தும் விளையும்.
சரி, இதற்கு உரம் வேண்டும் இல்லையா?அதற்கும் எங்கும் போக வேண்டாம்.ஒவ்வொரு வீட்டிலும் நாள்தோறும்உருவாகும் மக்கும் கழிவுகளை இரண்டுபூந்தொட்டிகளில் போட்டு வந்தால்அதுவே சிறந்த உரம். அதை ஒரு கைப் பிடிஅளவு போட்டாலே, காய்கறிகள் செழித்துவளரும். குளியலறைக் கழிவு நீர்வெளியேறும் இடத்தில் கல்வாழை
சேப்பங்கிழக்கு செடிகளை வைத்தால்அந்த சோப்புத் தண்ணீர் சுத்தமாகி விடும்.இப்படி எல்லாவற்றையும் ரீ-சைக்ளிங்செய்வதுதான் இந்த முறையின்முக்கியமான அம்சம். இப்படி ரீ-சைக்ளிங்செய்ய ஆரம்பித்தால், கழிவு நீர் என்பதேஇருக்காது. கழிவு நீர் இல்லை என்றால்கொசு இருக்காது. இதை எல்லாம்செய்தால் வீட்டில் எப்போதும் குளிர்ச்சிஇருக்கும். நம் வீட்டுக் கிணற்றில் மார்கழிஅதிகாலையில் தண்ணீர் எடுத்தால் வெதுவெதுப்பாகவும், சித்திரை வெயிலில்தண்ணீர்
எடுத்தால் குளிராகவும் இருக்கும்.என்ன அர்த்தம் என்றால், தண்ணீரின்குளிர் எப்போதும் அப்படியேதான்இருக்கிறது.
வெளிப்புற வெப்பம் கூடி,இறங்கும்போது நமக்குத் தண்ணீர் குளிராகவும், வெப்பமாகவும்தெரிகிறது. மேற்சொன்ன மாடித் தோட்டத்தையும், வீட்டைச் சுற்றி உரியமரங்களும் வளர்த்தால், வீட்டின் வெப்பம் எப்போதும் குளிர்ச்சியானநிலையில் சீராக இருக்கும்!”என்கிறார் இந்திரகுமார்

சிட்டுக் குருவிகள் வந்துபோகும் மொட்டை மாடி தோட்டங்கள்.
வீட்டில் கார்டன் போட இடமில்லையே என்ற கவலை இப்போது பலருக்கு இருக்கிறது. இனி அந்தக் கவலையில்லை! சிட்டி மெயின் ரோடில் உங்கள் வீடு இருந்தாலும்… அதில் மொட்டை மாடி இருந்தால்போதும் மனசுக்குப் பிடிச்ச கார்டன் ரெடி!
சென்னை அசோக் நகரின் நெரிசல் மிகுந்த இடத்தில் உள்ள அந்த வீட்டின் மொட்டை மாடியில் சிட்டுக்குருவிகள் ‘கீச் கீச்’ சப்தமிட்டபடி நம்மை வரவேற்றன… அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பிஸினஸ் டைரக்டராக இருக்கும் கண்ணன்!

‘‘எங்க வீடு மெயின்ரோட்டை ஒட்டி இருப்பதால் எப்போதும் பொலியூஷன், தேவையில்லாத சத்தம்… வீட்டிற்கு வந்தால் அமைதியே இல்லியேன்னு ரொம்ப கவலைப்பட்டேன். அப்புறமாத்தான் மொட்டை மாடியில் கார்டன் வைக்கணும்னு தோணுச்சு. செடி, கொடின்னு இருந்தால்தான் பறவைகள் வரும்னு நினைச்சேன்… இப்போ என் டெரஸ் கார்டன் நினைச்சமாதிரி அமைஞ்சிருக்கு… நிறைய குருவிகள் வருது… காலை நேரத்திலேயும் மாலையும் அதுங்களோட சத்தம் இனிமையா இருக்கு. அப்பாவுக்குத் தோட்ட வேலைன்னா ரொம்பப் பிடிக்கும். அவருக்கும், அம்மாவுக்கும்கூட இந்த கார்டன் ரிலாக்ஸ் தர்ற இடமா இருக்கறதில் எனக்கு ரொம்ப திருப்தி, சந்தோஷம்!’’ என்கிறார்.

மொட்டைமாடியில் கார்டனா? பேஸ்மெண்ட்  ஸ்ட்ராங்க்தான், பில்டிங் வீக் ஆகிவிடாதா என்கிறீர்களா? ‘மொட்டைமாடியில் முறைப்படி கார்டன் அமைத்தால், பில்டிங்கிற்கு எந்த சேதாரமும் ஆகாது’ என்கிறார், லேண்ட்ஸ்கேப் நிபுணர் ஆண்டனிராஜ்.

எதைச் செய்ய வேண்டும்? எது கூடாது?

‘‘டெரஸ் கார்டன் அமைக்கும் முன் சில விஷயங்களை கவனத்தில் வைப்பது அவசியம். முதலில் மொட்டை மாடியில் தண்ணீர் எந்தப் பக்கம் நோக்கிப் போகிறது என்பதைப் பார்த்து, அதற்கு எதிர்பக்க இடத்தை கார்டன் போட தேர்ந்தெடுங்கள். அந்தப் பகுதியில் கார்டன் ஸ்கெட்ச் போட்டு, அரை அடி உயரத்திற்கு கார்டன் தரையை உயர்த்திக்காட்ட தடுப்புச் சுவர் கட்டுங்கள். இந்த தடுப்புச் சுவரின் நடுவில் கார்டன் நீர்வடிய துவாரங்கள் இருக்க வேண்டும்.  அதன்மேல் ஜியோ டெக்ஸ்டைல் மேட்டுடன் லைட் வெயிட் மண் கலந்து போட வேண்டும். இந்தக் கலவை 5 கிலோ எடை மண் தேவைப்படும் இடத்தில் மண்ணை 2 கிலோவாக குறைக்கக்கூடியது. இதன்மேல் புல்தரை அமைத்து, அங்கங்கே தொட்டிகள் வைத்து, வழித்தடங்கள் அமைத்துவிட்டால் கார்டன் ரெடி.

மழை பெய்தாலும், தண்ணீர் அதிகமாகிவிட்டாலும், வாட்டர் ப்ரூஃப் வழியே நீர் வடிந்துவிடும். மொட்டை மாடித் தரைக்கு எந்த டேமேஜும் வராது’’ என்கிறார் ஆண்டனிராஜ்.

அப்புறமென்ன… உங்கள் வீட்டு மொட்டை மாடியிலும் பச்சைப் பசேல் தோட்டம் போடவேண்டியதுதானே

ரசாயன உரமில்லாமல் வீட்டின் மொட்டை மாடியில் காய்கறிகள்
புதுச்சேரி, ஏப்ரல் 3: ரசாயன உரமில்லாமல் இயற்கை உரமிட்டு வீட்டின் மொட்டை மாடியில் காய்கறிகள் வளர்த்து வரும் தம்பதியினர். அவ்வாறு விளையும் காய்கறிகளை மட்டுமே சமைத்துச் சாப்பிட்டு வருவதாக கூறுகின்றனர்.

புதுச்சேரி பாரதி வீதியைச் சேர்ந்தவர் பிரடெரிக் (வயது 63). இவர் புதுச்சேரி உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையில் முதுநிலை மருந்து ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய மனைவி செங்கோல் மேரி (வயது 63). இவர் புதுச்சேரி மகப்பேறு மருத்துவமனையில் தலைமைச் செவிலியராக பணிபுரிந்து ஓய்வுப் பெற்றுள்ளார்.
இவர்களது வீட்டின் இரண்டாவது மொட்டை மாடி முழுவதும்  தொட்டிகளில் பல்வேறு செடிகளும், மரங்களும் வளர்க்கப்பட்டு வருகின்றது. தற்போது இவர்களது மாடி தோட்டத்தில் உள்ள வாழைக் குலை தள்ளியுள்ளது. இதனைப் பார்ப்பவர்கள் மிகவும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

இரண்டாவது மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகள் பயிரிட்டு வருவது பற்றி செங்கோல் மேரி கூறியதாவது:
எனது கணவர் பிரெடரிக் ஒரு நாள் ரசாயண உரமில்லாமல், இயற்கை உரத்தில் வளர்க்கப்படும் செடிகளில் இருந்து காய்கறிகள் சாப்பிட வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து கணவரின் ஆசையை பூர்த்தி செய்வதற்காக கடந்த முயற்சித்து மாடியில் தொட்டிகளில் தக்காளி, வெண்டை, கத்தரிக்காய்,  பீன்ஸ், கொத்தவரங்காய் போன்ற செடிகளையும், கொடிகளில் வளரக்கூடிய பீர்க்கங்காய், புடலங்காய் போன்றவைகளையும் வளர்த்தேன்.
இதனை கடந்த 2000ம் ஆண்டில் இருந்து செய்து வருகின்றேன். அப்போது முதல் பெரும்பாலும் வீட்டில் வளர்க்கப்படும் செடிகளில் இருந்து பறிக்கப்படும் காய்கறிகளையே சமைத்துச் சாப்பிட்டு வருகின்றோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் வீட்டின் மெத்தையில் தோட்டம் வைத்திருப்பதைப் பார்த்த மதுரையில் உள்ள எங்களது நண்பர் ஒருவர் வாழைக்கன்று ஒன்றை கொடுத்தார். அந்த வாழைமரம்தான் தற்போது ஐந்தாவது முறையாக குளை தள்ளியுள்ளது.
மேலும் பப்பாளி மரத்தையும் வளர்த்து வருகின்றோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பேசிக்கில் வாங்கிய மாமரக்கன்று ஒன்றை தொட்டியில் வளர்த்தோம். அம்மாமரம் ஒரு ஆண்டிலேயே சிறந்த முறையில் கனிகளைக் கொடுத்தது.
அதன்பின்னர் நாங்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் தொட்டியை உடைத்துக் கொண்டு மாமரத்தின் வேர் வந்ததால், அம்மாமரத்தை உறவினர் ஒருவருக்கு கொடுத்து விட்டோம்.
எங்கள் வீட்டு தோட்டத்திற்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துகின்றோம். ரசாயண உரங்கள் எதையும் பயன்படுத்துவதில்லை. பூச்சி மருந்தாக சாண சாம்பலை மட்டுமே தூவுவோம். மற்றபடி எந்தவிதத்திலும் ரசாயன உரத்தையோ, பூச்சிக்கொல்லி மருந்தையோ பயன்படுத்துவதில்லை.
இந்த தோட்டம் எங்களுக்கு மிகந்த சந்தோஷத்தை தருகின்றது. மெத்தை எத்தனையாவது மாடியாக இருந்தாலும் நாம் நினைத்தால் தோட்டத்தை அமைத்து, பயிரிட்டு  காய்கறிகளைப் பறித்து சந்தோஷமாக வாழலாம். இந்த தோட்டம் வீட்டை குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி…
திரு சுல்தான் அவர்களே,
மாடியில் காய்கறி பயிரிட நீங்கள் மண் அல்லது சிமெண்ட் தொட்டிகளை பயன்படுத்துவது சிறந்தது. மண்ணின் அளவைக் குறைத்து, அதற்கு பதிலாக எடை குறைந்த மண்புழு உரம் அல்லது மக்கிய தேங்காய்நார் கம்போஸ்ட்டை பயன்படுத்துங்கள். இவை மண் இருகுவதைக் குறைப்பதோடு, தொட்டிகளை எளிதில் இடம் மாற்றவும் உதவும். நீங்கள் குறிப்பிட்டுள்ள 600 சதுர அடியில், தினசரி உபயோகிக்கும் புதினா, கொத்தமல்லி,தண்டுக்கீரை, சிறுகீரை,தக்காளி, கத்தரி, மிளகாய், சிறுவெங்காயம்,பொன்னாங்கன்னி, பாலக், முள்ளங்கி போன்றவற்றைபயிர் செய்யுங்கள். அருகிலுள்ள அக்ரோ-ஸ்டோர்களில் இவற்றின் விதைகள் சிறிய பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

மாடித் தோட்டம் – பயன்கள்
மாடித் தோட்டம் மன அழுத்தம் மற்றும்  மனக்கவலை இரண்டையும நீக்கும். வீட்டில் நடக்கும் சின்ன சின்ன பிரச்சனைகளினால் மன அழுத்தம் உண்டாகும். இனம் புரியாத பயம், மன அழுத்தத்தினால் வயிற்றுப்புண், இதய நோய் உண்டாகும். இவற்றை தவிர்க்க மாடித்தோட்டத்திற்கு சென்று சிறிது நேரம் செடிகளின் வளர்ச்சி மற்றும் பூத்திருக்கும் பூக்கள் மற்றும் காய்கள், கனிகளைக் கண்டவுடன் நம்முடைய மன அழுத்தம் சிறிது சிறிதாக குறையும்.அவற்றிற்கு தேவையான தண்ணீர் விடும் போதும், ஊட்டமிடும் போதும் நம்முடைய மன அழுத்தமும், மனக்கவலையும் உடனே நீங்குவதுடன் அல்சர், இதய நோய் போன்றவை வராமலும் தடுக்கலாம். மேலும் சுத்தமான, விஷமற்ற பூக்கள், காய்கள், பழங்கள் நமது பூஜைக்கும் சமையலுக்கும் கிடைக்கின்றன. எனவே நம் உடல் நலத்தையும் உள்ள நலத்தையும் கொடுத்து நம்முடைய ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும் மரம், செடி, கொடிகளுடன் மாடித் தோட்டம் அமைத்து வாழ்வோம்! வளமாக!

மாடித் தோட்டம் பராமரிப்பு
மாடித் தோட்டம் என்றால் அதற்கு ஊட்டம் (உரம்) வேண்டும். ஊட்டமாக சமையலறை கழிவுகளையே மட்கச் செய்து பயன்படுத்தலாம். பிண்ணாக்கு, அரிசி கழுவிய நீர், காய்கறிகள் கழுவிய நீர் வீட்டில் மீதமிருக்கும் இட்லி மாவுகளை பயன்படுத்தலாம். இட்லிமாவு புளித்திருந்தால் அவற்றில் சிறிதளவு சர்க்கரை (மண்டைவெல்லம்) சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

பூச்சிவிரட்டி மற்றும் பூச்சிநிர்வாகம்

அதிக அளவு ஊட்டத்தை பயன்படுத்தும்போது பூச்சிகள் தோன்றும். அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். அழிக்கக்கூடாது. அவற்றை கட்டுப்படுத்த

வேப்ப எண்ணெய், புங்கை எண்ணெய் சம அளவில் கலந்து அவற்றில் 25மில்லி எடுத்து 10லிட்டர் தண்ணீரில் கலந்து அவற்றுடன் சிறிதளவு காதிபார் சோப்பு கலந்து தெளிக்க வேண்டும்.

சீதாபழவிதை, வேப்பவிதை, மிளகாய் மூன்றிலும் தலா 200கிராம் எடுத்துக் கொண்டு அவற்றை அரைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இரண்டு நாள்கள் ஊரவைத்து பின்னர் ஒரு லிட்டர் மருந்திற்கு 10லிட்டர் தண்ணீர் விட்டு தெளிக்க வேண்டும்.

வெள்ளை பூச்சி மற்றும் நசுவினிக்கு மைதா மாவு பசையுடன் வேப்ப எண்ணெய், புங்கை எண்ணெய் கலவையுடன் சிறிதளவு சீதாபழவிதை இடித்து ஊர வைத்து தண்ணீர் ஆகியவற்றை கலந்து நல்ல வெயில் வேளையில் செடி முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.

காய்புழுக்களை கட்டுப்படுத்த சீதாபழவிதை, தங்கஅரளிவிதை இவற்றை இடித்து தண்ணீரில் இரண்டு நாட்கள் ஊறவைத்து அவற்றுடன் காதிபார் சோப்பு சிறிதளவு கலந்து தெளிக்க வேண்டும்.

குறிப்பு

ஊட்டத்தை குளிர்ச்சியான மாலைவேளை அல்லது அதிகாலை வேலைகளிலும், பூச்சிவிரட்டியை நல்ல வெயில் பொழுதில் பயன்படுத்த வேண்டும்.

செடிகள் நட்ட தொட்டிகளில் மூடாக்கிட வேண்டும். மூடாக்கிடுவதென்பது களைசெடிகள் மற்றும் இலைதழைகளைக் கொண்டு செடியைச் சுற்றி மூடுவதாகும்.மூடாக்கிடுவதினால் நீர் ஆவியாவதை 40மூ வரை குறைக்கலாம்.

வேர்பூச்சிக்கு வேப்பம்பிண்ணாக்கு, புங்கைபிண்ணாக்கும் கலந்த கலவையை வைத்து தண்ணீர் விட வேண்டும். புங்கைபிண்ணாக்கு கிடைக்காத பச்சத்தில் வேப்பம்பிண்ணாக்கு மட்டும் பயன்படுத்தலாம்.

பூக்கள் திரண்டகாய்களாக மாறுவதற்கும் அதிக காய்கள் பெறுவதற்கும் அயல் மகரந்த சேர்க்கை வழி தான் சிறந்தது. அதற்கு தேமோர் கரைசல் மிகவும் சிறந்ததாகும்.

தேமோர் கரைசல் தயாரிப்பதற்கு இரண்டு நாள்கள் புளித்த மோர் மற்றும் தேங்காய் தண்ணீர் இரண்டு நாள்கள் வைத்திருந்து அவற்றை சமவிகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். அவ்வாறு தெளிக்கும் போது இந்த கலவை தேனீக்களை கவர்ந்திழுக்கும் எனவே தேனீக்கள் மூலம் அயல் மகரந்த சேர்க்கை ஏற்படுகின்றது.

காய்கனிகள், பழங்கள், தானியங்கள் கழுவும் நீரையும் ஊட்டமாக பயன்படுத்தலாம். புளித்த இட்லி, தோசை மாவுகளுடன் சிறிது வெல்லம் கலந்து ஊட்டமாக பயன்படுத்தலாம்.

வண்ண பூக்களுக்கு டேபிள் ரோஸ் என்று சொல்லக்கூடிய காட்டு ரோஜா செடிகளை உடைந்த மக்குகளில் வளர்த்து ஆங்காங்கே வைத்து விட்டால் மாடித்தோட்டம் மிகவும் அழகாகவும் ரம்மியமாகவும் மனதிற்கு இதமாகவும் இருக்கும்.

மாடி தோட்டத்தில் காய்கறிகள் ஒரு சதுரடி பரப்பில் 2 முதல் 3 கிலோ !

ஒரு குடும்பத்துக்கு கால் ஏக்கர் நிலம் இருந்தால் போதிய வருவாய் எடுக்க முடியும் என்று தபோல்கர் கூறுகிறார். இதற்கு ஏற்ப தோட்டத்தை வடிவமைக்க வேண்டும். அன்றாடம் தோட்டத்தில் 4 மணி நேரம் உடல் உழைப்பு செலுத்த வேண்டும்.

பழமரங்கள், உரம் தரும் மரங்கள், தீவனம் வளம் குறைந்த நீரில் பயிர் செய்ய வேண்டும். காய்கறி, கிழங்கு, கீரை, பருப்பு, எண்ணெய்வித்து போன்றவற்றிற்கு அதிகம் தண்ணீரும் கவனமும் தேவை.

வேர்க்கடலை போன்ற பயிர் வகை 20 சதுரடி பரப்பில் ஒரு கிலோ தருகிறது.  நீர்மிகு காய்கறிகள் ஒரு சதுரடி பரப்பில் 2 முதல் 3 கிலோ தருகிறது.

மாடித்தோட்ட தொட்டியாக தெர்மாகூல் பெட்டி..

அன்றாடம் அதிகரித்துவரும் மட்காத குப்பைகளில் தெர்மாகூலும் ஒன்று. பிளாஸ்டிக் கூட்டுப்பொருளான ‘பினைல் ஈத்தேன்’ எனப்படும் வேதிப்பொருள் கொண்டதுதான் தெர்மாகூல். இந்தப்பொருளாலான பெட்டிக்கு வெப்பநிலையைக் காக்கும்தன்மை உள்ளதால், பனிக்கட்டிகள் வைக்க, மலர்களை அடைத்து அனுப்ப என பல வகைகளில் பயன்படுகிறது. ஆனால் ஒரு தடவை பயன்படுத்தியதும் தூக்கி வீசப்படுவதுதான் அதிகம். இப்படி வீசப்படும் இந்த தெர்மாகூல் குப்பை பிளாஸ்டிக்குகளுக்கு இணையாக சுற்றுச்சூழலுக்கு சவால் விட்டுக்கொண்டு நிற்கிறது.

இதோ, தன்னால் முடிந்த அளவுக்கு இந்த தெர்மாகூல் கழிவுகளுக்கு ஒரு வழியைக் கண்டறிந்திருக்கிறார், மதுரை, ஜவகர்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராம் பிரசாத். தெர்மாகூல் பெட்டிகளைச் சேகரித்து, அவற்றில் செடிகளை வளர்த்து மாடித்தோட்டம் அமைத்திருக்கிறார்.

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த ராம் பிரசாத்தைச் சந்தித்தோம், “எனக்கு சின்ன வயசுல இருந்தே செடிகள் வளர்ப்பது ரொம்ப பிடிக்கும். தொட்டி வாங்கி வளர்க்க காசு அதிகம் செலவாகும் என்று யோசித்த போதுதான் தெர்மாகூல் பெட்டி யோசனை வந்தது. இதை மறுசுழற்சியும் பண்ண முடியாது. எரிச்சா நச்சுப்புகை வரும். அது நுரையீரலுக்கு ரொம்ப கெடுதல். அதனால் அதையே மறுபயன்பாட்டுக்குக் கொண்டு வந்து சூழல் மாசுபாட்டை குறைக்கலாம் என்று முடிவு செய்தேன். இரண்டு தெர்மாகூல் பெட்டிகளை கொண்டு வந்து பொன்னாங்கண்ணி, புதினா கீரைகளை வளர்த்துப் பார்த்தேன். இரண்டுமே நன்றாக வளரவே.. கத்தரி, தக்காளி, வெண்டை, முள்ளங்கி, சீனி அவரை, பாகல், பொன்னாங்கண்ணி, சிறுகீரை, பாலக்கீரை என்று தனித்தனி பெட்டிகளில் வளர்க்க ஆரம்பித்தேன். இரண்டு வருடங்களாக தெர்மாகூல் பெட்டிகளில்தான் செடிகளை வளர்த்து வருகிறேன் என்றார்.

இரசாயன உரங்களால் அதிக பாதிப்பு வரும் என்று செய்திகளில் படித்ததிலிருந்து மாடித்தோட்டத்திற்கு இயற்கை உரம்தான் போடவேண்டும் என முடிவு செய்தேன். காய்கறிக் கழிவுகள் மூலமாக நானே உரம் தயாரிக்கிறேன். பெரிய தெர்மாகூல் பெட்டியில் மண், காய்கறிக் கழிவுகள், முட்டை ஓடு, நிலக்கடலைத் தோல், வெங்காயச் சருகு என்று சமையலறைக் கழிவுகள் எல்லாவற்றையும் போட்டு மேலே கொஞ்சம் மண் போட்டு வைத்து விடுவேன். தினமும் இந்தப் பெட்டியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு கிளறிக்கொண்டே இருந்தால், 20 நாட்களில் அதெல்லாம் மட்கி உரமாகிவிடும். இந்த இயற்கை உரத்தை செடிகளுக்குப் போட்டால் செடிகள் நன்றாக வளர்கிறது. அதனுடன் மண்புழு உரத்தையும் சேர்த்து போடுகிறேன். பூச்சிகளை விரட்ட வேப்பெண்ணெய், மாட்டுச் சிறுநீர் பயன்படுத்துகிறேன்.

தெர்மாகூல் பெட்டியில் செம்மண், மணல், கொஞ்சம் மட்கிய சாணத்தையும் போட்டு விதைச்சுடுவேன். பெட்டியில் தண்ணீர் வெளியேற சின்னத்துளை போட வேண்டும்.

இதில் செடிகளை வளர்க்கும் போது தண்ணீர் சீக்கிரம் ஆவியாவதில்லை. எடை குறைவாக இருப்பதால் இடம் மாற்றுவது சுலபம். அகலமாக இருப்பதால் கொடி வகைகள் படர்ந்து வளர்கிறது. காய்கறிகள் மட்டுமின்றி பூச்செடிகள், குரோட்டன்ஸ் செடிகளையும் வளர்க்கிறேன்.

ஆட்டோவில் சவாரி போகும்போது வரும்போது எல்லாம் ரோட்டில் எங்காவது தெர்மாகூல் பெட்டி இருக்கிறதா என்று பார்ப்பேன். கண்ணில் தென்பட்டால் எடுத்து வண்டியில் வைத்துக்கொள்வேன். இதற்கு கொஞ்சம் கூட வெட்கப்பட மாட்டேன். சில கடைகளில் சொல்லிவைத்தும் பெட்டிகளை வாங்கிக் கொள்வேன். பெட்டி கிடைத்தவுடனே அதில் ஒரு செடியை வைத்துவிடுவேன். இப்போது மொத்தம் 52 பெட்டிகளில் செடிகளை வளர்த்து வருகிறேன்”. என்றார்

சுவைக்கூட்டும் தேமோர் கரைசல்!

தேமோர்க் கரைசல் என்பது பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது. பயிர்களில் பூ எடுக்கும் சமயத்தில் இக்கரைசலைத் தெளித்தால், பூக்கள் அதிகமாகப் பூக்கும் இக்கரைசல் தெளிக்கப்பட்டு விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும்.

தயாரிப்பு முறை :

ஒரு லிட்டர் புளித்த மோர், ஒரு லிட்டர் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைத்து, தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும். ஏழு நாட்கள் இவ்வாறு செய்தால், தேமோர்க் கரைசல் தயாராகி விடும். 8-ம் நாள் ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி தேமோர்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் செடிகளுக்குத் தெளிக்கலாம்.

வீட்டுத்தோட்டத்திற்கான உரங்கள்..!

புறக்கடைத் தோட்டத்தில் செடிகள் நடுவதற்கு முன்பாக, மண்கலவையை உருவாக்க வேண்டும். நல்ல வளமான மண், தென்னைநார்க்கழிவு, மண்புழு உரம் ஆகிய மூன்றையும் சம அளவு கலந்து, செடி வளரப்போகும் பிளாஸ்டிக் பையில் முக்கால் பங்கு நிரப்பி வைக்க வேண்டும். பைகளில் விதை அல்லது நாற்றுகள் என எது நடுவதாக இருந்தாலும், பஞ்சகவ்யா கரைசலில் நனைத்து, விதைநேர்த்தி செய்த பிறகுதான் நடவேண்டும். வேர் சம்பந்தமான நோய்களைத் தடுத்து, தண்டு ஊக்கமாக வளர இது அவசியம். கொடி வகை மற்றும் பழச்செடிகள் நடுவதற்கு பெரிய அளவிலான பைகளைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். நம்மைச்சுற்றியுள்ள உபகரணங்களையும், இடுபொருட்களையும் பயன்படுத்தியேகூட எளிய முறையில் வீட்டுத்தோட்டம் அமைக்கலாம்.

செடியின் வளர்ச்சிக்கும், அதிக மகசூல் பெறுவதற்கும் இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும். கடலைப் பிண்ணாக்கு, ஆட்டு எரு, தொழுவுரம் ஆகியவற்றை 15 நாட்களுக்கு ஒரு முறை சரியான விகிதத்தில் கலந்து செடிகளுக்குக் கொடுக்க வேண்டும். தேவைப்படும்போது தலா 25 கிராம் வேப்பம் பிண்ணாக்கையும் கொடுக்கலாம். எறும்பு, எலி வேர்க்கரையான் தாக்குதல்களில் இருந்து செடிகளைக் காப்பாற்ற இது அவசியம். மழைக்காலங்களில் செடிகளின் ஈரத்தன்மையைப் போக்க வேப்பம் பிண்ணாக்கு இடவேண்டும்.

வீட்டுத்தோட்டத்தைக் காக்கும், பூண்டுக் கரைசல் !கத்தரி, தக்காளி, வெண்டை, அவரை உள்ளிட்ட காய்கறிச் செடிகளில் நோய்த் தாக்குதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதை நோய் வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தி விட வேண்டும். இதற்கு மூலிகைப் பூச்சிவிரட்டி அதிமுக்கியம். புகையிலை, பூண்டு, பச்சை மிளகாய், வேப்பிலை, நொச்சி இலை இவை ஐந்தையும் சம அளவில் எடுத்து உரலில் போட்டு இடித்து, மூழ்கும் அளவு மாட்டுச் சிறுநீரில் ஊறவைத்து, நன்றாக கொதிக்க வைத்து, பிறகு ஆறவைக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி வீதம் கலந்து பிஞ்சுப்பருவம் மற்றும் காய்ப்பருவம் ஆகிய இரண்டு பருவங்களில் செடிகளை நனையும்படி தெளிக்கலாம். செடிகளைத் தாக்கும் பூச்சிகளை விரட்டியடிக்கும் ஆற்றல், இந்த புகையிலை + பூண்டுக் கரைசலுக்கு உண்டு.

நொச்சி, வேம்பு, ஆடுதொடா இலை (ஆடாதோடை), நிலவேம்பு, பப்பாளி இலை என கிள்ளினால், பால் வடியும் ஐந்து இலைகளையும் சம அளவில் சேகரித்து 2 லிட்டர் மாட்டுச்சிறுநீரில் ஒருநாள் முழுக்க ஊறவைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். பிறகு 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி விகிதம் கலந்து, அதிகாலை அல்லது இளமாலை வேளைகளில் செடிகள் மீது தெளிக்க வேண்டும்.

தொடர்ந்து பிஞ்சுப்பருவம், காய்ப்பருவம் ஆகிய நாட்களில் தெளித்துவர, காய்ப்புழு, அசுவணி, இலைப்பூஞ்சணம் உள்ளிட்ட நோய்கள் அகன்று சீரான மகசூலைப் பெறலாம்.

இந்த இயற்கை முறை பூச்சிக்கொல்லியை வீட்டுத்தோட்டத்திற்கு பயன்படுத்துவதால், இரசாயன கொல்லி பாதிப்பை தடுக்கலாம்.

வீட்டுத் தோட்டத்தின் நன்மைகள் :

தற்போது ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றத்தை ஈடு செய்ய மக்கள் மாடி வீட்டு தோட்டத்தை அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுவும் சீமை சுரைக்காய், தக்காளி, கீரை போன்ற செடி வகைகளை மிக எளிய முறையில் வளர்க்கலாம். அடுக்கு மாடி வீட்டில் வசிப்பவர்கள் கொள்கலனில் மூலிகை மற்றும் காய்கறிகளை நன்கு வளர்க்க மூடியும்.

மேலும் வீட்டு தோட்டத்தில் பட்டாணி, வெள்ளரி, அவுரி நெல்லி, போன்ற பயிர்களை மிக எளிதாக அதிக மகசூல் பெற முடியும். இதனால் பல நன்மைகள் வீட்டிற்கும் உலகிற்கும் ஏற்படும். காய்கறி தோட்டம் அமைப்பது ஒரு கற்றல் செயல் முறையாகும்.  மாடி பகுதியில் பயிரிட வேண்டியவை:

பால்கனியில் நிழல் அதிகமாக இருந்தால் சாலட் கீரைகள், அவுரி நெல்லியினை வளர்கலாம்.
சிறிய காலிப் பகுதிகள் வீட்டின் முன் இருந்தால் மூலிகை செடிகள் வளர்த்தால் மிக நன்றாக இருக்கும்.
நல்ல தரமான மண் தோட்டத்தில் இருந்தால் காய்கறிகள், பூச்செடிகளை வளர்க்கலாம். மண்ணை வளப்படுத்த இயற்கை உரங்களை பயன்படுத்தலாம்.
தோட்டத்தில் ஒரு முறை விதைகளை விதைத்த உடன் அது வளர்ந்து வரும்போது வாரம் ஒரு முறையாவது களை எடுக்க வேண்டும். வெப்பமான காலங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது தண்ணீர் விட வேண்டும்.
பயிரிடப்பட்ட தாவரம் நன்றாக வளர்ந்த பிறகு பாக்டீரியா மற்றும் நூண்ணுயிரிகளை அழிக்க டாக்சோபிளாஸ்மா என்ற பூச்சிக் கொல்லியினை பயன்படுத்தலாம்.
நீங்கள் தக்காளி, கேரட், கீரை போன்ற தாவரங்களை வளர்க்க வெறும் 6 அடி முதல் 8 அடி வரை தோட்டத்தில் காலி இடம் இருந்தால் போதும். இவ்வாறு வீட்டு தோட்டத்திலே காய்கறிகளை வளர்ப்பதால் சுத்தமான காற்று நமக்கு கிடைப்பதுடன், சுகாதாரமான இயற்கை காய்கறிகளும் கிடைக்கிறது.

வீட்டுத்தோட்டத்தால் Gold Finch  பறவை இனம் அதிகரித்துள்ளது!

தற்போது இங்கிலாந்தில் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு நடந்தது. அதில் Song Bird இனங்கள் பல அழிந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் Gold Finch பறவைகளின் எண்ணிக்கை இங்கிலாந்து தோட்டங்களில் பெருகி வருவதாக தகவலறிக்கை கூறுகிறது. தற்போதைய கணக்கெடுப்பின்படி 2002 மற்றும் 2012-ல் Gold Finch பறவைகளின் எண்ணிக்கை 80% அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மக்கள் வீட்டுத்தோட்டங்களில் Gold Finch-க்கு சரியான நேரத்தில் உணவு வழங்குவதே ஆகும் என்று ஆய்வு கூறுகின்றது.

மேலும் இதற்கு  காரணம் என்ன என்பது பற்றி ஆய்வு செய்து பார்த்ததில் குளிர்காலத்தில் பறவைகளுக்கு கொழுப்பு சத்து மற்றும் வைட்டமின்கள் அடங்கிய சூரியகாந்தி விதை உணவுகளை வழங்கியதே ஆகும். இதனால் குளிர்காலங்களில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள Gold Finch பறவை இனங்கள்கூட இங்கிலாந்தின் தோட்டங்களை தற்போது அலங்கரித்து வருவதாக கணக்கெடுப்பு கூறுகிறது.

அழிந்து வரும் பறவைகளுக்கும் இதுபோன்ற உணவு வகைகளை கொடுத்தால் கண்டிப்பாக அதனுடைய எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என்று இங்கிலாந்தின் தோட்டக்கலை அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

RSPB அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான கிரகாம் மட்ஜ் கூறியதாவது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது இங்கிலாந்து தோட்டத்தில் Gold Finch பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கூறினார். இதைப்போன்று மற்ற பறவைகளுக்கு விதை உணவினை அளித்தால் கண்டிப்பாக அதனுடைய எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது உண்மையே.

லாபம் தரும் மண்ணில்லா மொட்டைமாடி விவசாயம்:
லாபம் தரும் மண்ணில்லா மொட்டைமாடி விவசாயம் மண் இல்லா விவசாய முறையை, தனது வீட்டு மாடியில் அமல்படுத்தி சாதித்துகாட்டியுள்ளார் கோவை, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாகேந்திரன்.எம்.இ., எலக்ட்ரானிக்ஸ் முடித்த இவர், 10 ஆண்டுகளாக இன்ஜி., கல்லுாரிகளில் பேராசிரியராக பணியாற்றிவிட்டு, தற்போது, ‘ஏரோபோனிக்ஸ்’ விவசாய திட்டம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். விவசாயத்தின் முக்கிய உயிர்நாடி மண் வளம்; பயிர்கள் வேர் பிடிக்க மண் அவசியமான ஒன்று. ஆனால், இவர், மண்ணே இல்லாமல் செடி வளர்த்து, இரண்டு ஆண்டுகளாக சத்தான காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறார்.
தனது வீட்டின் மொட்டை மாடியில் ‘மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்’ செய்கிறார்; கண்காணிக்க ஆள் தேவையில்லை; நீர் பாய்ச்சுவது உள்ளிட்ட அனைத்தையும் கம்ப்யூட்டர் கவனிக்கிறது. விவசாயிகள் துாவும் உரம், சில நேரத்தில் மண்ணில் தங்கி, மண்வளத்தை கெடுக்கலாம். ஆனால், இவரது மாற்று விவசாய முறையில் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.ஐநுாறு சதுர அடி பரப்புள்ள, மொட்டை மாடி தான் இவரது பசுமைத் தோட்டம். பி.வி.சி., குழாய்களில் பயிர் வளர்கிறது. ஏறக்குறைய ஒவ்வொரு குழாயிலும் 150 செடிகள் வளரும் அளவுக்கு, சிறு துளைகள் போடப்பட்டு நாற்றுகள் பிடிப்புடன் வைக்கப்பட்டுள்ளன (மண் இல்லை). வளர்ந்த செடிகள் கீழே சரியாமல் இருக்க, அதன் கிளைகள் நுாலால் கட்டப்பட்டுள்ளன.செடிகளின் வேர்களுக்கு நீர் பாய்வதில்லை; மாறாக செடிகளின் மீது, தானியங்கி முறையில் நீர் (ஸ்பிரிங்லர்) தெளிக்கப்படுகிறது. தினமும் குறைந்தது, 7 நிமிடம் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. இலை, காய் வளர்ச்சிக்கே இங்கு முக்கியத்துவம். மொட்டை மாடி தோட்டத்துக்குள் வெய்யில் நுழைவதில்லை. சணல் சாரம், கூடாரம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. வெய்யிலால் ஏற்படும் வெப்பத்தின் தாக்கம் கூடும்போது மேற்குபகுதி நீர் தெளித்து குளிரூட்டப்படுகிறது. இதற்காக சிறு துளைகள் வழியாக, மேலிருந்து தண்ணீர் துாவப்படுகிறது.தண்ணீர் தெளிப்பு உள்ளிட்ட அனைத்துக்கும், 300 வாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின்னுற்பத்தி சாதனம் உதவுகிறது. அறையின் ஈரப்பதமும், தட்பவெப்ப நிலையும், எப்போதும் பாதுகாக்கப்படுகிறது. இதுகுறித்து, நாகேந்திரன் கூறியதாவது: ஐநுாறு சதுரடி பரப்பளவு தோட்டத்தில் வளர்க்கப்படும் 1000 செடிகளுக்கு தினமும், 250 லி., நீர் போதுமானது. ஒரு கிலோ தக்காளி உற்பத்திக்கு 1.50 ரூபாய் மட்டுமே செலவாகிறது. ஒரு சென்ட் நிலத்தில் மாதம், 15 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு நவீன விவசாயம் இஸ்ரேல், கனடா, தாய்லாந்து, ஜெர்மனி நாடுகளில் நடைமுறையில் உள்ளது. சிங்கப்பூரில் இத்திட்டத்துக்காக, அந்நாட்டு அரசு பெரும் உதவிசெய்கிறது.குறிப்பிட்ட கால இடைவெளியில், சீரான தண்ணீர் வினியோகம் இருப்பதால் அனைத்து செடிகளும் ஒரே மாதிரியாக வளர்கிறது. நோய், பூச்சி, புழு எதுவும் செடிகளை தாக்குவதில்லை. மண்ணில் காய்க்கும் செடிகளை விட உயரமாக வளர்கிறது. இதன் காய்களும், பழங்களும் சத்து மிக்கதாக உள்ளது. விளைநிலங்கள் காணாமல் போகும் இக்காலகட்டத்தில், இத்திட்டத்தை பயன்படுத்தி, எதற்கும் பயன்படாத தரிசு நிலங்களையும் பசுஞ்சோலைகளாக்க முடியும். நாட்டின் காய்கறி உற்பத்தியை மட்டுமல்ல, உணவு பற்றாக்குறையையும் தீர்க்க முடியும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories