பூச்சி தாக்குதல் என்பது விவசாயத்தில் பல சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் ஒவ்வொரு பயிரையும் குறிப்பிட்ட பூச்சிகளை மட்டுமே அதிகம் தாக்கும் .அதைப்பற்றி தெரிந்து கொண்டால் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியும் .அந்த வகையில் கொத்தவரை தாக்கும் பூச்சிகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறை குறித்து இங்கு காணலாம்.
கொத்தவரை மட்டுமல்ல காய் புழுக்கள் பருத்தி ,மக்காச்சோளம் ,உளுந்து ,பாசிப்பயறு, நிலக்கடலை, அவரை, மிளகாய் ,தக்காளி போன்ற பயிர்களையும் தாக்கக்கூடியது.
காய்ப் புழுக்கள் காய்களை துளையிட்டு உள்ளிருக்கும் விதைகளை உண்டு அதிக சேதம் விளைவிக்க கூடியவை. பு ழுவின் தலையும் உடலின் முன் பகுதியும் மட்டுமே காய்களுக்குள் செல்லும். மீதிப் பகுதியை காயின் வெளியே காணப்படும். ஒரு புழு பல காய்களைத் தாக்கும். காய்கள் உண்டாவதற்கு முன்பு புழுக்கள் செடிகளின் ஒரு பகுதியையும், இலைகளை கடித்து உண்டு அழித்துவிடும்.
காய் புழுவின் பெண் அந்துப்பூச்சி முட்டைகளை இலைகள் ,பூ மொட்டுக்கள், பூக்கள், பிஞ்சு காய்கள் ஆகியவற்றின் மேல் தனித்தனியாக இடு ம். ஒரு பூச்சி 300 முதல் 1000 முட்டைகள் வரை இடும் .அவை கோள வடிவமாகவும், இளம் மஞ்சள் நிறத்திலும் வரிவரியாக கோடுகள் தென்படும். அவை 35 நாட்களில் பொரித்து இளம் புழுக்கள் வெளிவரும். இளம் புழுக்கள் வெண்மை கலந்த மஞ்சள் நிறத்துடனும் கரும் பழுப்பு நிற தலையை கொண்டு உடலின் நுண்ணிய கருமைநிற புள்ளிகளுடனும் மில்லியன் ரோமங்களுடன் தென்படும். அவை 15 முதல் 25 நாட்களில் முழுவளர்ச்சி அடையும். வளர்ந்த புழுக்கள் மண்ணுக்கடியில் கூட்டுப் புழுக்களாக மாறும். கூட்டுப் புழுவிலிருந்து அந்துப்பூச்சி பத்து முதல் பதினைந்து நாட்களில் வெளிவரும். அந்து பூச்சிகள் தடிமனாகவும் ,இளம் பழுப்பு நிறத்திலும் தென்படும்.
கொத்தவரை அறுவடைக்குப் பிறகு உடனடியாக செடிகளை அப்புறப்படுத்திவிட வேண்டும். வயலை நன்றாக உழுது மண்ணுக்கடியில் இருக்கும் கூட்டுப்புழுவை அழிக்கலாம். புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை பறித்து அழித்துவிடவேண்டும். வயலில் காணப்படும் பெரிய புழுக்களை கையால் சேகரித்து அழிக்க வேண்டும் விளக்குப் பொறி வைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம் .இனக்கவர்ச்சிப் பொறிகளை ஏக்கருக்கு 5 வீதம் வைத்து ஆண் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம் .டிரைக்கோகிரம்மா என்னும் முட்டைகளை தாக்கி அழிக்கக்கூடியது. பிராக்கான் ,கிலோனஸ் போன்ற பு ழு ஒட்டுண்ணிகள் மூலம் புழுக்களை தாக்கி அழிக்கலாம்.