அரை ஏக்கர்… 18 மாதங்கள்… 2 லட்சம்:

பூரிக்கவைக்கும் பூனைத்தலைக் கத்திரி!

நம்நாட்டில் நெல்லுக்கு அடுத்தபடியாக, அதிக ரகங்கள் இருக்கும் ஒரு பயிர் என்றால்… அது கத்திரியாகத்தான் இருக்கும். புளியம்பூ கத்திரி, பவானிக் கத்திரி, கோவை வரிக்கத்திரி, வெள்ளை வரிக்கத்திரி, பச்சை வரிக்கத்திரி… என இப்போதும் கூட பல வகையான நாட்டுக் கத்திரி ரகங்கள் நம்மிடையே புழக்கத்தில் உள்ளன. மணமும் சுவையும் மருத்துவ குணமும் கொண்ட நாட்டுக் கத்திரிகள் ஒவ்வொரு பகுதியிலும் அந்த மண்ணுக்கேற்றப் பயிராக விளைந்தன. ஆனால், ஒரு கட்டத்தில் வீரிய ரகங்களின் அதிரடி வருகையால், காலகாலமாக அருமையான விளைச்சலையும், அடுத்த போகத்துக்கான விதைகளையும் கொடுத்துக் கொண்டிருந்த நாட்டு ரகங்களில் பெரும்பாலானவை, படிப்படியாக அழிந்துவிட்டன. இன்று, விதைகளுக்காக கம்பெனிகளிடம் கையேந்தி நிற்கிறார்கள், விவசாயிகள்.

இத்தகைய கொடுஞ்சூழலிலும்… நாட்டு ரகங்களை விடாமல் காப்பாற்றி சாகுபடி செய்துவரும் சில விவசாயிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவராக, ‘பூனைத்தலைக் கத்திரி’ என்று அழைக்கப்படுகிற ‘வெள்ளைவரி உருண்டைக் கத்திரி’ என்கிற நாட்டு ரகத்தைப் பயிர் செய்வதுடன், பிற விவசாயிகளுக்கு விதைகளையும் கொடுத்து வருகிறார், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயுள்ள சின்ன பாப்பனூத்து கிராமத்தைச் சேர்ந்த இளம்விவசாயி வி.எம். ராமநாதன்.

உடுமலைப்பேட்டை-ஆனைமலை சாலையில் பயணித்தால், பன்னிரண்டாவது கிலோ மீட்டரில் இடது பக்கம் இருக்கிறது, சின்ன பாப்பனூத்துப் பிரிவு. தென்மேற்குப் பருவமழை, காற்றுடன் கலந்து பன்னீர் தெளித்து, சிலுசிலுத்த மழைப்பொழுதில் கத்திரி வயலில் ராமநாதனைச் சந்தித்தோம்.

நாடி வந்த நாட்டு ரகம்!

”எனக்கு இதுதான் சொந்த ஊர். டிப்ளோமா படிச்சுட்டு, வேலை தேடி அலையாம அப்பாவுக்குத் துணையா விவசாயத்துல இறங்கிட்டேன். 30 ஏக்கர்ல வெவசாயம் பண்றோம். அதுல 15 ஏக்கர்ல தென்னை இருக்கு. மீதி 15 ஏக்கர்ல சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, மிளகாய், கத்திரினு காய்கறிகளை மாத்தி மாத்தி சாகுபடி செய்றோம். போட்ட விதை பொல்லாப்பில்லாம விளையுற வளமான செம்மண் பூமி. ஆரம்பத்துல நாட்டு ரக காய்கறிகளைத்தான் விளைய வெச்சோம்.

காலப்போக்குல எல்லோரையும் போல வீரிய விதைக்கு நாங்களும் மாறிட்டோம். கத்திரியிலும் கோ-1, கோ-2 ரகங்களைத்தான் நடவு செஞ்சோம். ஆனா, நாட்டு ரக கத்திரி என்னைத் தேடி வந்தது.

‘லட்சுமி பாட்டி’னு ஒருத்தங்க வீட்டுக்கு விருந்துக்குப் போயிருந்தோம். அதுல எங்களுக்கு பரிமாறுன எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு அபாரமான சுவையா இருந்துச்சு. சாப்பிட்டு முடிச்சு பாட்டியம்மாகிட்ட ‘அந்தக் கத்திரிக்காயை எங்க வாங்கினீங்க?’னு கேட்டோம். ‘இங்கதான் வாங்கினேன்’னு சிரிச்சுக்கிட்டே அவங்க வீட்டுக் கொல்லைப்புறத்துக்குக் கூட்டிப் போயி, அங்க இருந்த செடிகளைக் காட்டினாங்க. பூனைத்தலை வடிவத்துல கிரிக்கெட் பந்து அளவுக்கு ஊதா நிறத்துல வெள்ளைவரிகள் ஓடின காய்கள் தொங்கிட்டு இருந்துச்சு. செடிகளைப் பார்த்து அசந்துட்டேன். ‘இது பாரம்பரிய ரகம். ரொம்ப வருஷமா எங்க வீட்டுத் தோட்டத்துல இருக்கு. நாலு பழம் தாரேன். விதை எடுத்து வீட்டுல நட்டு நீங்களும் சாப்பிடுங்க’னு சொல்லி கத்திரிப் பழங்களைக் கொடுத்தாங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மழை வலுக்க, நனையாத இடத்துக்கு நம்மை அழைத்துச் சென்ற ராமநாதன் தொடர்ந்தார்.

நேரடிப் பராமரிப்பு அவசியம்!

”அந்தப் பழங்கள்ல எடுத்த விதைகள்ல நாத்து எடுத்ததுல அஞ்சு பாத்திக்குத் தேவையான அளவுக்கு நாத்து கிடைச்சுது. அதுல இருந்து, விதை எடுத்து இப்போ அரை ஏக்கர்ல பூனைத்தலைக் கத்திரியைச் சாகுபடி செஞ்சிருக்கோம். 18 மாசத்துல 20 டன் மகசூல் கிடைச்சிருக்கு. சராசரியா கிலோவுக்கு 10 ரூபாய்ங்கிற விலையில 2 லட்ச ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. அதுல 70 ஆயிரம் ரூபாய் செலவு போக, ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபம். பருவ நிலை, தண்ணீர், விற்பனை வாய்ப்பு மூணும் நல்லா இருந்ததால எதிர்பார்த்ததைவிட அதிகமாவே லாபம் கிடைச்சிருக்கு. எவ்வளவு வேலையாட்கள் இருந்தாலும், கண்கொத்திப் பாம்பா நாமளும் வயலைப் பாத்துக்கிட்டே இருந்தாத்தான் விவசாயத்துல ஜெயிக்க முடியும்” என்ற ராமநாதன்,

”விளைஞ்ச காய்கள்ல ஊக்கமான காய் களாகப் பார்த்து செடிகள்ல பழுக்க விட்டிருக்கோம். இதுல இருந்தே விதை எடுத்து ஆர்வமுள்ள விவசாயிகளுக்குக் கொடுக்கலாம்னு இருக்கோம். இப்போ நான், ‘இயற்கைப் பாதி…செயற்கைப் பாதி’னு விவசாயம் செய்றேன். இதை முழுசா இயற்கை முறையிலயும் சாகுபடி செய்யலாம். அடுத்த போகத்துல இருந்து, இந்த நாட்டு ரகத்தை மட்டுமாவது முழு இயற்கை முறையில சாகுபடி செய்யலாம்னு நினைச்சிருக்கேன். காணாம போன இந்த ரகம் திரும்பவும் பரவணுங்கிறதுதான் எங்க கனவு” என்று சொல்லி விடை கொடுத்தார்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories